வசீகரிக்கிறதா சூர்யா – கா.சு. கூட்டணி!?
’எதற்கும் துணிந்தவன்’, ‘கங்குவா’ படங்களுக்குப் பிறகு, பெரிதாக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது சூர்யாவின் ‘ரெட்ரோ’. அதற்குக் காரணம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தந்த கையோடு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரோடு கைகோர்த்ததே. suriya retro movie review may 1
சரி, அந்த எதிர்பார்ப்புக்குத் தக்கவாறு ‘புதுவிதமான’ திரையனுபவத்தைத் தருகிறதா ‘ரெட்ரோ’?

காதலே அடிநாதம்! suriya retro movie review may 1
பாரிவேல் கண்ணன் (சூர்யா) என்கிற ரவுடியைக் காதலிக்கிறார் கால்நடை மருத்துவரான ருக்மிணி (பூஜா ஹெக்டே). அதுவும் பருவ வயதில் பார்த்த உடனே இருவருக்குள்ளும் காதல் பற்றுகிறது.
அது எப்படி? பதின்ம வயதைத் தொடுவதற்கு முன்னே, ஒரு அசாதாரணமான சூழலில் இருவரும் சந்தித்திருக்கின்றனர். நட்பு பாராட்டியிருக்கின்றனர்.
அப்போது முதல் இறுக்கமான முகத்துடன் சிரிப்பு என்றால் என்னவென்று தெரியாதவராக இருக்கிறார் பாரி. அவரிடத்தில் மாற்றங்களைப் புகுத்தி தன் வழியில் ‘சாந்தமானவராக’ மாற்றத் துடிக்கிறார் ருக்மிணி. அதற்கேற்பச் சில மாற்றங்கள் பாரியிடத்தில் தெரிகின்றன.
ஆனால், ‘பாரி – ருக்மிணி’ திருமண விழாவுக்கு டாடி (ஜோஜு ஜார்ஜ்) வந்தபிறகு அந்த நிலைமை தலைகீழாகிறது.
பாரி ‘டாடி’ என்றழைக்கும் அந்த நபர் (ஜோஜு ஜார்ஜ்) ஒரு கேங்க்ஸ்டர். ஒருமுறை டெல்லியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் (பிரகாஷ்ராஜ்) சொல்லும் வேலையை, பாரியைக் கொண்டு முடிக்க நினைக்கிறார். பாரி ‘வேண்டாம்’ என்று மறுக்கிறபோதும், வலுக்கட்டாயமாக அதனைச் செய்து வைக்கிறார்.
டாடி சொன்னபடி ஆப்பிரிக்கா நாடு ஒன்றில் கப்பல் வழியே ‘கோல்டு பிஷ்’ எனப்படுகிற சில பொருட்களை இறக்குவதுதான் திட்டம். ஆனால், அதனைச் செய்யாமல் ஏமாற்றுகிறார் பாரி.
அதற்கான பலன், பாரியின் திருமண விழாவின்போது எதிரொலிக்கிறது. விழாவில் இருக்கும்போது, ‘எங்க கோல்டு பிஷ்ஷை மறைச்சு வச்சிருக்க’ என்கிறார் டாடி. ‘சொல்ல முடியாது’ என்று பாரி சொன்னதும், ருக்மிணியைக் கொல்லச் செல்கிறார்.
பதிலுக்கு அவரைப் பாரி தாக்க, அங்கே ரத்தக்களரி ஆகிறது. பாரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
பாரி சிறிதளவும் மாறவில்லை என்றுணரும் ருக்மிணி, கண் காணாத இடத்திற்குத் தன் தந்தையோடு இடம்பெயர்கிறார்.
சிறையில் இருக்கும்போதும் அவரிடம் ‘கோல்டு பிஷ் எங்கே’ என்று காவலர்கள் மூலமாகக் குடைச்சல் கொடுக்கிறார் டாடி. எத்தனை துயர்கள் வந்தாலும், ‘வாய் திறக்க மாட்டேன்’ என்று வீம்பு பிடிக்கிறார் பாரி.
அதன்பிறகு என்னவானது? சிறையில் இருந்து வெளியே வந்தாரா பாரி? தனது காதலியைக் கண்டாரா? மிக முக்கியமாக, வன்முறை பாதையில் இருந்து அவரால் விலக முடிந்ததா என்று சொல்கிறது ‘ரெட்ரோ’வின் மீதி.
இந்தக் கதையில், அந்தமான் நிகோபாரில் உள்ள ஒரு தீவுக்கு பாரி செல்வதாக ஒரு கிளைக்கதை உண்டு. அங்கு அவர் ஏன் செல்கிறார்? அவரது காதல் அதற்குக் காரணமானது எப்படி என்று திரைக்கதையில் சொல்லியிருக்கிற விதம் அருமை.
மற்றபடி இதர விஷயங்கள் அனைத்தும் செயற்கைச் சாயம் பூசிக்கொண்ட சின்னக்குழந்தைகள் ‘செல்ஃபி’க்கு போஸ் கொடுத்தது போலிருக்கின்றன.
’ரெட்ரோ’வில் பாரி – ருக்மிணி காதலே அடிநாதம். அதனை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இன்னும் பல விஷயங்களை திரைக்கதையில் இழுத்துப் போட்டிருப்பதுதான் நம்மை ‘ஆவ்..வ்.’ என்று ‘பீல்’ பண்ண வைக்கிறது.

திருப்தி கிடைக்கிறதா? suriya retro movie review may 1
சூர்யாவைப் பொறுத்தவரை, விதவிதமான கெட்டப்களில் வருவதற்கான வாய்ப்புகளைத் தந்திருக்கிறது ‘ரெட்ரோ’ திரைக்கதை. அதனை அவர் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவரது நடிப்பு, தொண்ணூறுகளில் வந்த ‘சத்யா’, ‘கலைஞன்’, ‘வெற்றிவிழா’ கமலைப் பார்ப்பது போலிருக்கிறது. என்ன, அதற்கேற்ற காட்சிகள்தான் அமையவில்லை.
நாயகி பூஜா ஹெக்டே அழகாகத் தெரிவதோடு, சிறப்பாகவும் நடித்திருக்கிறார். ஆனால், அவரைத் தொடர்ந்தாற்போல வசனம் பேச வைத்து அழகு பார்க்க இயக்குனர் விரும்பவில்லை போலும்.
இதில் சுவாசிகாவும் ஓரிரு காட்சிகளுக்கு வந்து போகிறார். இது போக, இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் எனப் பலர் உண்டு. suriya retro movie review may 1
அவர்களில் வில்லனாக வருகிற விது கொஞ்சமாய் கவனம் பெறுகிறார். சுஜித் ஷங்கர் தனது வித்தியாசமான ‘தமிழ்’ உச்சரிப்பால் ஈர்க்கிறார். சிங்கம்புலி, தமிழ், பிரேம்சங்கர், ரெம்யா சுரேஷ், ராமச்சந்திரன் துரைராஜ் போன்றோர் நிலைமை ரொம்பவே மோசம். அவர்கள் வந்து போகின்றனர் என்பதே ‘க்ளோஸ் அப்’களில் சில ஷாட்களில் காட்டப்படுகிறபோதுதான் தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளர் ஷஃபீக் முகம்மது, கலை இயக்குனர்கள் ஜாக்கி மற்றும் மாயபாண்டி மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விரும்பிய உலகைக் கட்டமைக்க உதவியிருக்கின்றனர். அவர்களது பங்களிப்பு, ஒரு ‘கிளாஸான’ கிளாசிக் படம் பார்த்த உணர்வைத் தருகிறது.
’கனிமா’ பாடல் வழியே திரையில் தலைகாட்டியிருக்கும் சந்தோஷ் நாராயணன், பின்னணி இசையில் நம்மைக் கவர்ந்திழுக்கிறார். இதர பாடல்களும் கூட ‘ஓகே’ ரகம்.

தனது முந்தைய படங்கள் கவனம் பெற்றதற்கு, ‘ரெட்ரோ’ உணர்வைத் தந்த திரைக்கதைகளே காரணம் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவற்றில் இருந்து பெற்ற ஊக்கத்தின் வழியே ‘ரெட்ரோ’ கதையையும் காட்சியமைப்பையும் உருவாக்கியிருக்கிறார்.
என்ன, இப்படத்தில் மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரையனுபவங்களைக் கலந்து கட்டியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். அதுதான் சிலரை ‘ஜெர்க்’ ஆக்க வைக்கும்.
’ரெட்ரோ’ பார்த்தபிறகு திருப்தி கிடைக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், ‘எஃப்டிஎஃப்எஸ்’ பார்க்கிற ரசிகர்கள் கொண்டாடுகிற வகையில் சில காட்சிகள் இருக்கின்றன; ஆனால், அவை பின்னாட்களில் கூட்டம் குறைவாக இருக்கிறபோது திரையரங்குகளுக்கு வருகிறர்களை நிச்சயம் திருப்திப்படுத்தாது என்பதே உண்மை. suriya retro movie review may 1
அதனைப் புரிந்துகொண்டால், இந்த படத்தில் எந்த காட்சிகள் கொண்டாடப்படும் என்பதற்கான பதில் தெரிந்து போகும். அந்த வகையில் ஆங்காங்கே நம்மை ஈர்க்கிற ‘ரெட்ரோ’, ஒரு முழுமையான ‘கமர்ஷியல் படமாக’ அமையவில்லை. அதற்குக் காரணம், ஏற்கனவே வெற்றியடைந்த படங்களின் தாக்கத்தில் காட்சிகளை, அவற்றின் பிணைப்பை இதிலும் உருவாக்க முயன்றிருப்பதே.
அதேநேரத்தில், சூர்யாவை ஸ்டைலிஷாக, ஒரு ஆக்ஷன் ஸ்டார் ஆக இப்படம் காட்டியிருக்கிறதா என்றால் ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டும். ‘கனிமா’ பாடலில் ஓரிடத்தில் ‘அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சல’ பாடலில் வருவது போன்று ஒரு ‘குத்தாட்டம்’ போட்டிருக்கிறார். அந்த டான்ஸ் நமக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’டை தரும். இப்படிச் சில விஷயங்கள் நம்மை கொக்கி போட்டு திரையினுள் இழுக்கின்றன.
ஆனால், ஒரு திரைப்படமாக நோக்கினால் ‘ரெட்ரோ ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமல்ல’ என்பதே என் கருத்து. ‘வித்தியாசமானதா’ என்றால், ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் கலந்துகட்டிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘புதுவிதமாக இருக்கிறதா’ என்றால் அதற்கும் அதே பதில்தான். சரி, ‘ரெட்ரோவில் சூர்யா – கா.சு. கூட்டணி வசீகரிக்கிறதா’ என்றால், அதற்கும் அதே பதில்தான்.