தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எதிரான தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைகால பெஞ்ச் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்கள் திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன; இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு தொடர்பு உண்டு; ஆகையால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று யூ டியூபர் சவுக்கு சங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தது. அத்துடன், முறைகேட்டில் தொடர்புடைய நிறுவனத்துக்கும், செல்வப் பெருந்தகைக்கும் தொடர்பு இருந்தால் தமிழ்நாடு அரசுக்குதான் பெரும் பிரச்சனை எனவும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எச்சரித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தம் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கோடைகால பெஞ்ச் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் செல்வப்பெருந்தகை மனுத் தாக்கல் செய்திருந்தார். அதே போல, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு எதிராக தலித் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், செல்வப்பெருந்தகைக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடை கால விடுமுறை பெஞ்ச் அப்படி என்ன அவசரமாக விசாரிக்க வேண்டும்? இந்த வழக்கில் கோடைகால விடுமுறை பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கிறோம்; தலித் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையையும் மனுதாரராக சேர்க்க வேண்டும்; அனைத்து தரப்பினரது வாதங்களையும் கேட்ட பின்னரே உத்தரவுகளைப் பிறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.