வைஃபை ஆன் செய்ததும் அதிமுக- பாஜக கூட்டணியில் சந்தேக நிழல் படிகிறது என்கிற தகவல் வந்து விழ, வாட்ஸ் அப் மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. Is AIADMK Poised to Btray BJP
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை விட்டால் வேறுவழியே இல்லை என்பதால் அந்தக் கட்சியை இழுத்துக் கொண்டு வந்து கூட்டணியில் சேர்த்தது பாஜக. சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுகவுடனான கூட்டணியை அறிவித்தார். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் விருந்து உபசரிப்பு எல்லாம் அரங்கேறியது.
பாஜக- அதிமுக இடையே மீண்டும் மலர்ந்த இந்த கூட்டணியில் இப்போது சந்தேகப் புயல் வீசத் தொடங்கிவிட்டது என்கின்றன டெல்லி தகவல்கள். பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளரான பிஎல் சந்தோஷ், டெல்லியில் தம்மை சந்திக்கும் தமிழக அரசியல் ‘தலை’களிடம், அதிமுக ஏதோ ஒன்று செய்து கொண்டிருக்கிறது.. எங்களுக்கு வரும் தகவல்கள் எல்லாம், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டுவிடும் என்பதாகத்தான் இருக்கிறது என கூறி வருகிறாராம்.
பாஜக சஞ்சலப்படும் அளவுக்கு அதிமுக என்னதான் செய்து கொண்டிருக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர்களிடம் நாம் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, எங்களுக்கு இடைவிடாமல் நெருக்கடி கொடுத்துதான் கூட்டணியில் பாஜக இழுத்துக் கொண்டது. அதிமுகவைப் பொறுத்தவரையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். அதேபோல பாமகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது; இந்தப் பேச்சுவார்த்தைகளைத்தான் பாஜக சந்தேகத்துடன் பார்க்கிறது என்றனர்.
பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுகவுடன் பாமக, விஜய்யின் தவெக இணைந்தால் சந்தோஷப்படத்தானே வேண்டும்.. ஏன் இப்படி தத்தளிக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளிடம் கேட்டால், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி என்று இருந்தால் அதிகமான இடங்களை பாஜகவால் கேட்டுப் பெற முடியும். மேலும் சில எம்.எல்.ஏக்களை தமிழக சட்டமன்றத்துக்கு எங்களால் அனுப்ப முடியும்; கடந்த தேர்தலில் 20 இடங்கள்தான் பாஜகவுக்கு கிடைத்தது. இந்த முறை கூடுதல் இடங்களைக் கேட்டு வாங்குவது என்பதுதான் எங்கள் திட்டம்.
ஆனால் அதிமுக இதற்கு பிடி கொடுக்காமலேயே இருப்பதுதான் எங்களது சந்தேகத்தின் தொடக்கப் புள்ளி. விஜய் கட்சி மற்றும் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி அதிமுகவிடம் கேட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வருவது நல்லதுதானே என்கிறது.

அப்படி விஜய், பாஜக- அதிமுக கூட்டணிக்கு வருவதாக வைத்துக் கொண்டால் ஆகக் குறைந்தது 60 இடங்களாவது அந்த கட்சிக்குக் கொடுக்க வேண்டும்; ஏனெனில் விஜய் கட்சி சரிபாதி தொகுதிகளைத் தர வேண்டும் என்பதில் இருந்து பேரத்தைத் தொடங்கி இருக்கிறது; பாமகவுக்கு கடந்த முறை தரப்பட்ட 23 இடங்களைவிட கூடுதலாக தர வேண்டும்; அதிமுகவும் குறைந்தபட்சம் 140 தொகுதிகளிலாவது போட்டியிடத்தான் செய்யும்.. அப்படியானால் இயல்பாகவே பாஜகவுக்கு சொற்பமான தொகுதிகளைத்தான் அதிமுக கொடுக்க முடியும். . இதனால்தான் விஜய் மற்றும் பாமகவை மட்டும் வைத்துக் கொண்டு பாஜகவை கழற்றிவிடுமோ அதிமுக என்கிற சந்தேகம் எங்களுக்கு வரத் தொடங்கிவிட்டது என்கின்றனர்.
பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை என அடித்துப் பேசும் தவெக வட்டாரங்களில், தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் பெரும் தோல்வியைத்தான் தழுவுவோம். அதனால் இயல்பாகவே திமுகவுக்கு எதிரான அதிமுக கூட்டணியில் கணிசமான தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு தேர்தலை சந்திப்பதுதான் சரியான வியூகமாக இருக்கும் என்றும் அதிமுகவிடம் சரிபாதி இடங்களையாவது கேட்டுப் பெற வேண்டும் என்றும் தொடர்ந்தும் ஆளுக்கு ஒரு கருத்துகளைத்தான் கூறி வருகின்றனராம்.
அண்ணா திமுகவைப் பொறுத்தவரை, விஜய் + பாமக கூட்டணியைத்தான் சரியான சாய்ஸாக கருதுகிறதாம்; பாஜக இழுத்த இழுப்புக்கு இப்போது சென்றுவிட்டாலும் கடைசி நேரத்தில் பாஜகவை நட்ட நடுத்தெருவில் கழற்றிவிட்டு போகத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்றன அரசியல் வட்டாரங்கள் என டைப் செய்துவிட்டு Sent பட்டனை தட்டிவிட்டது வாட்ஸ் அப்.