ADVERTISEMENT

கரூர் பெருந்துயரம் : முன்னாள் நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை : ஆனால்… உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published On:

| By Kavi

கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ், அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த அக்டோபர் 3ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய்யை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

ADVERTISEMENT

அதோடு கரூர் பெருந்துயரம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சிபிஐ விசாரணை கோரி உயிரிழந்த 10 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த வழக்கை கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நீதிபதிகள் ஜேகே மகேஸ்வரி மற்றும் என்வி அஞ்சாரியா அமர்வு விசாரித்தது.

அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமரியாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி கேட்டதால், இதனை ஏற்ற நீதிபதிகள் உத்தரவை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த சூழலில் இன்று (அக்டோபர் 13) காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்குத் தொடர்ந்திருப்பதாக கூறியிருந்த, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ் காணொளி வாயிலாக ஆஜராகினார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். எனினும் அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வழிகாட்டு வழிமுறைகள் வகுக்க கோரிய மனு குற்றவியல் மனுவாக எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் அறிக்கைகளைக் கேட்டுள்ளனர் நீதிபதிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share