வைஃபை ஆன் செய்ததும், “நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால்..” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா நினைச்சதும் நடந்ததும்?
நடிகர் விஜய் விவகாரம்தான்.. கரூர் சம்பவத்துல சிக்கி 41 பேர் இறந்த கேஸில் இன்னைக்கு வந்த தீர்ப்பைத்தான் சொல்றேன்..
ஓஹோ.. உச்சநீதிமன்ற தீர்ப்பை யார் யார் எப்படி பார்க்கிறாங்கன்னு விளக்கமாக சொல்லுமய்யா..
கச்சேரியை ஆரம்பிக்கிறேன் பொறுமய்யா.. கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான SIT விசாரணையை CBI-க்கு மாற்றியிருக்கு உச்சநீதிமன்றம். அதோட நிற்காம, நீதிபதிகள்- போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்றும் சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் எனவும் சொல்லி இருக்கு உச்சநீதிமன்றம். ரிட்டையர்ட் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் அஜய் ரஸ்தோகி தலைமையில்தான் 3 பேர் கொண்ட குழு போடப்பட்டிருக்கு.. இந்த குழுவில் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவராக இல்லாத தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் 2 பேரும் இருக்கனும் என்பதுதான் சுப்ரீம் கோர்ட் கொடுத்த ஆர்டர்.
ஆமாய்யா.. கவனிச்சேன்.. தீர்ப்புக்கு பிறகு ‘கலவையா’ ரியாக்ஷன் வந்துகிட்டு இருக்கே..
அதுவும் சரிதான்.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த உடனேயே முதல்வர் ஸ்டாலின் தமக்கு நெருக்கமானவர்களிடம் டிஸ்கஸ் செய்தார். இதுக்கு முன்னால, கரூர் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே நடந்த டிஸ்கஷனிலேயே சிஎம் என்ன முடிவில் இருக்கார்னு நாம டிஜிட்டல் திண்ணையில் விளக்கமாகவே சொன்னோம்.. அதாவது,”கரூர் சம்பவத்தை சிபிஐக்கு கொடுத்துடலாம்.. ஆனால் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்குற நிலையில சிபிஐ விசாரணை முழுக்க திமுகதான் காரணம் என்கிற கண்ணோட்டத்துலயே நம்மை டேமேஜ் செய்யுற மாதிரியே கொண்டு போவாங்க.. நாமதான் ஏதோ குற்றம் செஞ்ச மாதிரி பரப்புவாங்க.. தேர்தல் நேரத்துல செந்தில் பாலாஜி தொடங்கி திமுக நிர்வாகிகளை வம்படியாக விசாரணைக்கு அழைச்சு டென்ஷனாக்குவாங்க.. மீடியாவுல ரொம்ப பெரிசாக்கிடுவாங்க.. அதையும் யோசிக்கனும்.. அதனால நீதிமன்றம் என்ன சொல்லுதோ அதன்படி செய்வோம்”-ன்னு சொன்னார் என நாம் டிஜிட்டல் திண்ணையில் சொல்லி இருந்தோம்..
ஆமாய்யா.. இப்ப சிஎம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறாராம்?
இப்பவும் சிஎம் ஸ்டாலின் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறாராம். இந்த டிஸ்கஷன் பற்றி முதல்வருக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசிய போது, “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி சிஎம் ரொம்ப இயல்பாகவும் பாசிட்டிவ்வாகவும்தான் எடுத்துகிட்டார். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு கருத்து கூட உச்சநீதிமன்றம் சொல்லலை என்பதையும் சிஎம் சுட்டிக்காட்டினார். அத்தோடு, SIT விசாரணைங்கிறது மெட்ராஸ் ஹைகோர்ட் ஆர்டர்தான்.. அதைத்தான் நம்ம கவர்மென்ட் சுப்ரீம்கோர்ட்டில் டிபெண்ட் செஞ்சோம்.. அவ்வளவுதான் நாம செய்யவும் முடியும்.. இப்ப சுப்ரீம் கோர்ட் சிபிஐக்கு மாற்றி இருக்கு.. இதுலயும் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லையே..
ஏற்கனவே தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் அரியலூர் மாணவி லாவண்யா இறந்ததுக்கு மதமாற்றம்தான் காரணம்னு அண்ணாமலை அறிக்கை கொடுத்தாரு.. டெல்லியில தமிழ்நாடு இல்லம் முன்பாக பாஜக மாணவர் அமைப்பினர் ஆவேசமாக போராட்டம் நடத்துனாங்க..
அதோட நிற்கலையே.. டெல்லியில் இருக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூட வந்து விசாரிச்சது.. அப்புறமாக சென்னை உயர்நீதிமன்றம், அந்த கேஸை சிபிஐக்கு அனுப்பியது.. தேசிய அளவில் ஏதோ மிகப் பெரிய மதமாற்றம் நடந்துவிட்டதாக பில்டப் செஞ்சாங்க.. சிபிஐ விசாரிச்சது..
கடைசியில என்ன நடந்தது?
ஹைகோர்ட்டில், மதமாற்றமே நடக்க முயற்சிக்கலை.. குடும்ப பிரச்சனையில்தான் மாணவி லாவண்யா தற்கொலை செய்தார்னு சிபிஐயே கேஸை கைவிட்டுருச்சு இல்லையா?” என்பதையும் சிஎம் நினைவுபடுத்தினார்.
அத்துடன், இப்ப CBI தனியாகவும் விசாரணை நடத்தலையே.. சிபிஐ விசாரிப்பதையே உச்சநீதிமன்றம் போட்டிருக்கிற குழு கண்காணிக்கவும் போகுது..
அந்த கண்காணிப்பு குழுவுலயும் கூட, தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரிங்க இருக்க போறாங்க.. அந்த குழுகிட்டதான் சிபிஐ ஒவ்வொரு மாதம் ரிப்போர்ட் தரப் போகுது.. நம்ம SIT விசாரிச்சு என்ன அறிக்கை கொடுத்தாலும் அதை வைச்சும் பிரச்சனைதான் செய்வாங்க.. அதனால சிபிஐ அவங்க போக்குல விசாரிச்சு அறிக்கை கொடுக்கட்டும்.. சிபிஐ எந்த கோணத்துல விசாரிக்குதுன்னு பார்ப்போம்.. அதுக்கு அப்புறமாக என்ன செய்யலாம்னு யோசிப்போம்” என கேசுவலவாகவே சொன்னார் சிஎம்” என்றனர்.
விஜய் தரப்பில் ஒரே குஷியா?
இருக்காதாய்யா.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த உடனேயே, விஜய்க்கு ஆதவ் அர்ஜூனா போனடிச்சு பேசியிருக்கிறார்.
அப்ப, “SIT விசாரணைக்கு பதிலாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில விசாரணை நடத்தனும்னு நாம சுப்ரீம் கோர்ட்டில் கேட்டிருந்தோம்.. இப்ப நாம நினைச்ச மாதிரியே ஆர்டர் வந்துருச்சு.. நமக்கு ‘சாதகமாகத்தான்’ தீர்ப்பு வரும்னு உங்க கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தேன்..
இப்ப சொன்னபடியே தீர்ப்பும் வந்துருச்சு” என ஆதவ் அர்ஜூனா குதூகலத்தில் சொல்ல சொல்ல.. விஜய், “கங்கிராட்ஸ.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. சொன்னபடியே ‘ஆர்டர்’ வாங்கிட்டீங்க” என பாராட்டி தள்ளிவிட்டாராம்.
அத்துடன் தவெகவின் நிர்வாகிகளிடம் பேசிய விஜய்யும், “ஆதவ் அர்ஜூனாவுக்கு டெல்லியில் நிறைய கான்டாக்ட்ஸ் இருக்கு.. அதை சுப்ரீம்கோர்ட் ஆர்டர் மூலமே நிரூபிச்சும் காண்பிச்சுட்டாரு.. ஆதவ் சொன்னபடியே செஞ்சுட்டாரு” என வழக்கத்துக்கு மாறாக ரொம்பவே பாராட்டினாராம்.
இதே மாதிரிதான் தவெக நிர்வாகிகளும் ஒரே குஷிதானாம்.. இந்த கோர்ட் ஆர்டர் மூலமாக தவெக கட்சிக்குள் ஆதவ் அர்ஜூனாவின் இமேஜ் சர்ர்ர்ன்னு ஏறிகிட்டே இருக்காம். ஆதவ் அர்ஜூனாவை ஆஹோ ஓஹோவென.. “சொன்னதை சாதிச்சுட்டீங்க” என பாராட்டி தள்ளுகின்றனர் நிர்வாகிகள்.
சரி.. சிபிஐ விசாரணை கிடைச்சதுல அதிமுக, பாஜகவுக்கும் ஹேப்பிதானே?
நீர் சொல்றது ஓரளவு சரி.. SIT விசாரணைக்கு பதிலாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில விசாரணை நடத்தனும்னு கேட்டது தவெக ஆதவ் அர்ஜூனா; ஆனால், சிபிஐ விசாரணை கேட்டது அதிமுகவும் பாஜகவும்தான்.. அதிமுக நேரடியாக இல்லாமல் கரூரில் இறந்த குடும்பத்தினர் பெயரில் சிபிஐ விசாரணை கேட்ட மனுவை போட்டது.. பாஜக வக்கீலும் மனு போட்டிருந்தார்.
அதிமுக ரியாக்சன் பற்றி, எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்த போது,” சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை பார்த்ததுமே அண்ணனால நம்பவே முடியலை.. ஏன்னா இப்படி சிபிஐ விசாரணைக்கு உடனே மாற்றிடுவாங்கன்னு அவரு எதிர்பார்க்கலை.. இருந்தாலும் சிபிஐ விசாரிக்க போவதால ரொம்ப ஹேப்பியாத்தான் இருக்கிறார்” என்கின்றனர்.
ஆனால், பாஜக தரப்பில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கிறார்கள்..
என்னய்யா சொல்றீரு.. பாஜகவுக்கு இந்த தீர்ப்பால என்னதான் பிரச்சனையாம்?
பாஜகவின் சீனியர் தலைவர்களிடம் நாம் பேசிய போது, “சிபிஐ விசாரிக்கனும்னு ஆர்டர் வரும்னுதான் ரொம்பவே நாங்க எதிர்பார்த்தோம் என்பது உண்மைதான். எங்க எதிர்பார்ப்பும் நிறைவேறிடுச்சுதான்..
ஆனால் சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றத்தோட ரிட்டையர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கப் போகுதுன்னு ஆர்டர் கொடுத்திருக்காங்க..
அஜஸ் ரஸ்தோகி குஜராத் பில்கிஸ் பானு கேஸுல குற்றவாளிகளுக்கு கருணை காட்டலாம்னு ஆர்டர் தந்தவரு.. ஜல்லிக்கட்டு கேஸுலயும் நமக்கு சாதகமாக தீர்ப்பு தந்தவர்களில் ஒருத்தர்தான்…
ஆனாலும் சிபிஐ நாம சொல்றதை விசாரிக்கிற மாதிரி இந்த ‘கண்காணிப்பு’ விசாரணை இருக்காதே..” என ஏதோ ஒரு அரசியல் கணக்கு பிழையாகிவிட்டதை சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தனர்” என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.