தமிழகத்தின் கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
சிபிஐ நடத்தும் விசாரணையை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 3 பேர் குழு கண்காணிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுவின் தலைவர் அஜய் ரஸ்தோகி பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர்.
யார் இந்த அஜய் ரஸ்தோகி?
- ராஜஸ்தான் மாநிலத்தில் 1958-ம் ஆண்டு ஜூன் 18-ந் தேதி பிறந்தவர் அஜித் ரஸ்தோகி.
- 1982-ம் ஆண்டு வழக்கறிஞர் பணியில் சேர்ந்தார்.
- 1990 ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக பரிந்துரைக்கப்பட்டார்.
- 1999-2000 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
- 29.05 2006 முதல் 13.04. 2016 வரை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பணியாற்றினார்.
- 14.04.2016 முதல் 13.05.2016 வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
- 01.03.2018-ல் திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்
- 02.11.2018 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2023-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார் அஜித் ரஜ்ஸ்தோகி.
- உச்சநீதிமன்றத்தில் 4.5 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய போது மொத்தம் 158 வழக்குகளில் தீர்ப்பு வழங்கினார்
- உச்சநீதிமன்ற பணிகாலத்தில் மொத்தம் 506 பெஞ்சுகளில் ஒரு நீதிபதியாகவும் இடம் பெற்றிருந்தார்.
வழங்கிய தீர்ப்புகள் - ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகிய காலப் பணியில் (Short service commission) சுமார் 20 ஆண்டுகள் வரை பணியாற்றி வந்தனர்; தங்களை ஆண் அதிகாரிகள் போல் ஓய்வு பெறும் வயது வரை நீண்ட கால பணியில் ( Permanent Commission ) இருக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், ஆண் அதிகாரிகளைப் போல பெண் அதிகாரிகளும் நீண்டகால பணியில் இருக்க அனுமதிக்க வேண்டும் என 2020-ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை- பின்னாளில் தலைமை நீதிபதியான டிஒய் சந்திரசூட்டுடன் இணைந்து வழங்கியவர் அஜய் ரஸ்தோகி.
- 2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில் யுபிஎஸ்சி தேர்வர்களின் வயது வரம்பு 32-ஐ உயர்த்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், ‘இதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு’ என கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்த 3 நீதிபதிகளில் ஒருவர் அஜய் ரஸ்தோகி.
- 2022-ம் ஆண்டு அங்கன்வாடி- சத்துணவு ஊழியர்களுக்கும் கிராஜூவிட்டி வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை நீதிபதி ஏஎஸ் ஓஹாவுடன் இணைந்து வழங்கினார்.
- 2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகளின் போது கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு குஜராத் அரசு கருணை காட்டுவது குறித்து பரிசீலனை செய்யலாம் என உத்தரவிட்ட நீதிபதிகளில் ஒருவர் ரஸ்தோகி. இந்த வழக்கை விசாரித்த ரஸ்தோகி, ஒருவர் கொடுங்குற்றத்தில் ஈடுபட்ட காரணத்துக்காகவே அவருக்கு கருணை காட்டுவது தவறு என சொல்ல முடியுமா? (Merely because the act was horrifc, is that sufficient to say remission is wrong?)
என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில்தான் பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு எதிரான பில்கிஸ் பானுவின் சீராய்வு மனுவையும் ரஸ்தோகி பெஞ்ச் டிஸ்மிஸ் செய்தது. பின்னர் 11 குற்றவாளிகளின் விடுதலை உத்தரவையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. - 2023-ம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுதான் நியமிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்சில் அஜய் ரஸ்தோகியும் ஒருவர்.
- 2017-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது; இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை 2023-ம் ஆண்டு நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான பெஞ்ச் தள்ளுபடி செய்தது. மேலும், ஜல்லிக்கட்டு போன்ற பொதுப்பட்டியலில் உள்ள அம்சங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற அனைத்து மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உண்டு என்கிற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பும் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகளில் அஜய் ரஸ்தோகியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
