சென்னையில் இன்று (அக்டோபர் 13) நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,” இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தின் முடிவின்படி நாளை 14.10.2025 முதல் 17.10.2025 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் கூடும் மறைந்த முன்னாள் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக கரூரில் நடந்த துயர சம்பவம், முன்னாள் கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், முன்னாள் ஜார்கண்ட் சட்டமன்ற உறுப்பினர் சிபு சோரன், நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன் உள்ளிட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து சட்டமன்ற பேரவை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதோடு பேரவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும்.
அதன் தொடர்ச்சியாக 15 ஆம் தேதி கூடுதல் மானிய கோரிக்கை பேரவைக்கு வழங்கப்படும் நிலையில் வரும் 17.10.2025 வரை கூட்டத்தொடர் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.
