”கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் கொண்டாட ஒன்றுமில்லை. இது இடைக்கால தீர்ப்பு தான். போலி மனுத்தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ள 2 பேரின் மனு மீதான விசாரணைக்கு பின்னரே இறுதித்தீர்ப்பு தெரிய வரும்” என மூத்த வழக்கறிஞர் இன்று (அக்டோபர் 13) பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தசூழலில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த அக்டோபர் 3ஆம் தேதி இதுதொடர்பான வழக்கை விசாரித்து சிபிஐ விசாரணைக்கு மறுத்துவிட்டது.
எனினும் அன்றைய தினமே பிரச்சாரத்திற்கான நெறிமுறைகள் வகுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்து நீதிபதி செந்தில் குமார் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரை மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜூனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதவிர அங்கு மேலும் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கரூரில் உயிரிழந்த 10 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் பிச்சமுத்து, பாத்திமா பானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ், பாஜகவைச் சேர்ந்த ஜி.எஸ்.மணி ஆகியோர் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
அப்போது, ”நாட்டின் மனசாட்சியை உலுக்கிய இந்த சம்பவத்தில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் . எனவே இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து, சிபிஐ விசாரணை கோரும் இரண்டு மனுதாரர்கள் தங்களுக்கு தெரியாமல் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறியது குறித்து வழக்கறிஞர்கள் ஏ.எம். சிங்வி மற்றும் பி. வில்சன் நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இதை பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது உறுதியானால் அது தொடர்பாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம்” எனக் கூறி, தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய 8 வார கால அவகாசத்தை நீதிபதிகள் வழங்கினர்.
அதன்பின்னர் உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மூத்த வழக்கறிஞர் வில்சன் பேசுகையில், ‘கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருப்பது இடைக்கால உத்தரவுதான். இது இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழ்நாட்டில் பணிபுரியாத இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுடன் விசாரணை நடத்தலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கரூரில் அருணா ஜெகதீசனின் ஆணைய விசாரணை தொடரும். எஸ்.ஐ.டி விசாரணை குழு இதுவரை என்ன விசாரித்துள்ளதோ அதனை சிபிஐக்கு மாற்றம் செய்ய சொல்லி மட்டுமே உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
தவெகவும் சிபிஐ விசாரணையை தான் கோரியுள்ளனர். கரூர் துயரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இரண்டு நபர்கள் தங்கள் அனுமதி இல்லாமல் போலியாக மனு தாக்கல் செய்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஒருவேளை அந்த மனுக்கள் போலியானதாக தாக்கல் செய்யப்பட்டு இருந்தால், தற்போதைய உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்யும். கிரிமினல் வழக்காக பதிவு செய்து விசாரிக்கப்படும். மோசடி என்பது தெரியவந்தால் சிறைக்கு கூட அனுப்பப்படலாம்.
கூட்டநெரிசலில் பலியான 41 பேருக்கும், காயமடைந்த 146 பேருக்கும் தவெக எந்த உதவியும் செய்யவில்லை. தங்களை காப்பாற்றிக்கொள்வதாக நினைத்து தீர்ப்பு பெற்றுள்ளார்கள். ஆனால் இது இறுதி தீர்வுக்கு உட்பட்டது. ஆகவே வழக்கில் இறுதி உத்தரவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அருணா ஜெகதீசன் ஆணையம் முக்கியமானது. கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம்? யார் மீது தவறு உள்ளது? யாரிடம் கவனக்குறைவு இருந்தது? என்பதை சொல்லக்கூடிய முக்கியமான ஆணையம். அதன் விசாரணையை உச்சநீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை. அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை தொடரும். சிறப்பு புலனாய்வுக்குழு இதுவரை என்ன விசாரித்தார்களோ அதனை டிரான்ஸ்பர் செய்ய சொல்லி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இது கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை. போலி மனுத்தாக்கல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு பேரின் விசாரணைக்கு பின்னரே இதுகுறித்து முழு விவரம் தெரிய வரும்” என பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
