கரூர் பெருந்துயரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே இருக்கும்போது எப்படி வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியும். விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உமா ஆனந்தன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி பி ஆர் கவாய் முன்பு இன்று (அக்டோபர் 7) முறையிடப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு வரும் வெள்ளிக்கிழமை சிபிஐ விசாரணை கோரிய மனுவை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
அதேசமயம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவும், தமிழக அரசு அமைத்த முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.