தாயை மாடு மேய்க்க சொல்வதா… கடமையிலிருந்து தப்ப முடியாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

வயதான தாய்மார்களுக்கு, தங்கள் கணவர் உயிருடன் இருந்து ஜீவனாம்சம் வழங்கி கவனித்து கொண்டிருந்தாலும் கூட, மகனிடம் இருந்தும் பராமரிப்புச் செலவுக் கோர உரிமை உண்டு என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரள மாநிலம் மலப்பரத்தைச் சேர்ந்த கயக்குட்டி(60) குடும்ப நல நீதிமன்றத்தில் தனது மகன் ஃபரூக்கிடமிருந்து பராமரிப்பு தொகையாக மாதம்தோடு 25 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த பின்னர் 60 வயதுடைய பரூக்கின் தாய்க்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து பரூக் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு இன்று (நவம்பர் 13) நீதிபதி கௌசர் எடப்பகத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பரூக் சார்பில், ‘நான் வளைகுடா நாட்டில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். எனது தாயார் மாடு மேய்த்து நல்ல வருமானம் ஈட்டுகிறார். தந்தை சொந்தமான படகுவைத்து மீன்பிடி வேலை செய்து வருகிறார். அவர் தனது தாய்க்கு பணம் கொடுத்து கவனித்து வருகிறார்” என்று வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்து கண்டனம் தெரிவித்த நீதிபதி, ”ஒரு தாய் தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்று கவனிக்கப்பட்டாலும், அவர் தனது மகன் அல்லது மகளிடம் இருந்து ஜீவனாம்சம் கோருவதற்கான உரிமை உண்டு.

ADVERTISEMENT

தாய் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில், கணவரும் போதிய ஆதரவு அளிக்கவில்லை என்றால், மகன் சட்டப்பூர்வமாகப் பங்களிக்கக் கடமைப்பட்டவர்.

அதுபோன்று ஒரு பெண்ணின் கணவருக்குப் போதுமான வசதி இருந்து அவர் அவளைப் பராமரித்தாலும், அது பிஎன்எஸ் பிரிவு 144(1)(d)-ன் (முன்னர் Cr.P.C பிரிவு 125(1)(d)) கீழ், மகனுக்கு உள்ள சுயாதீனமான சட்டப்பூர்வக் கடமையிலிருந்து அவனை விடுவிக்காது. மகனும் கண்டிப்பாக தாயை கவனித்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், தாயை மாடு மேய்த்து பிழைப்பு நடத்தச் சொல்வது மகனின் தார்மீக தோல்வியை வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, வயதான தாயை பராமரிப்பது என்பது மகனின் தார்மீக கடமை மட்டுமல்ல சட்டப்பூர்வ கடமையும் ஆகும்” என்று கூறினார்.

மகன் பரூக் சார்பில் முன்வைக்கப்பட்ட, ‘தான் தனது குழந்தைகளையும், மனைவியையும் பார்த்துகொள்ள வேண்டும் ’என்ற வாதத்தையும் நீதிபதி ஏற்க மறுத்து, பெற்றோரை பரமாரிக்கும் பொறுப்பில் இருந்து மகன்களால் தப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மகன் அல்லது மகள் தனது தாயைப் பராமரிக்கும் பொறுப்பு என்பது, தந்தையின் நிதி நிலைமையைப் பொறுத்து மாறுவதில்லை. பிள்ளைகளுக்கு கட்டாய கடமை உள்ளது என்பதை குறிப்பிட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share