டிஜிட்டல் திண்ணை: சிவசங்கர் வடக்கு- மனோ தங்கராஜ் தெற்கு… அமைச்சரவை மாற்றத்தில் ஸ்டாலின் போட்ட புதுக் கணக்கு!

Published On:

| By Aara

mk stalin cabinet change

வைஃபை ஆன் செய்தபோது தமிழக அமைச்சரவை மாற்றம் பற்றிய ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“எதிர்பார்த்தது போலவே தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு ஏப்ரல் 27 மாலை வெளிவந்தது. அமைச்சர் பொன்முடி, அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டன. Sivsankar North- Mano Thangaraj South… Stalin’ new calculation

பொன்முடி வகித்து வந்த வனத்துறை பதவி அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும்,  செந்தில்பாலாஜி வகித்து வந்த மதுவிலக்கு  மீண்டும் அமைச்சர் முத்துசாமிக்கும்,  மின்சாரத்துறை தற்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கும் அளிக்கப்பட்டுள்ளது

புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் அமைச்சரவைக்குள் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி என்ன?  

அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் அவரது ஜாமீன் ரத்தாகும் சூழல் ஏற்பட்டது. ஏப்ரல் 28 ஆம் தேதியான இன்று வரை அவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில்…  சட்ட ஆலோசனைகளுக்குப் பின் செந்தில்பாலாஜியிடம் இருந்து ராஜினாமா கடிதம் பெற்றார் முதல்வர் ஸ்டாலின்.

அதே நேரம் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சைவ வைணவ சர்ச்சை பேச்சில் சிக்கிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியான துணைப் பொதுச் செயலாளர் பதவியை முதலமைச்சர் ஸ்டாலின் பறித்தார்.  அதோடு இல்லாமல் பொன்முடி மீது முதலமைச்சர் மிகக் கடுமையான கோபத்தில் இருந்தார்.

முதல்வரின் குடும்பத்தினரும் பொன்முடியின் இந்த பேச்சால் கடும் கோபம் அடைந்தனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் முதலமைச்சரின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின், ‘இனிமேல் அவர் இந்த வீட்டு பக்கம் வரவேண்டாம்’ என்ற அளவுக்கு தனது அதிருப்தியை முதல்வரிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். Sivsankar North- Mano Thangaraj South… Stalin’ new calculation

இதனை தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் பகிர்ந்து கொண்ட முதலமைச்சர், ‘ஒவ்வொரு வீட்டுப் பெண்களும் இப்படித்தானே அவரைப் பற்றி நினைப்பார்கள். அவரை எப்படி அமைச்சரவையில் வைத்திருக்க முடியும்?’ என்று கேட்டிருக்கிறார்.

இந்த வகையில் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து விலக முதலமைச்சர் அறிவுறுத்தியபோதும், ஏப்ரல் 27 மதியம் வரை பொன்முடி மசியவில்லை. முதல்வரின் கடும் எச்சரிக்கைக்குப்   பிறகு தான் ராஜினாமா செய்வதற்கு ஒப்புக் கொண்டார்.

செந்தில்பாலாஜிக்கு தனது ஆதரவை காட்டும் விதமாய்,  நேற்று மாலை கோவையில் அவர் அமைச்சராக நடத்திய கடைசி அரசு விழாவுக்கு துணை முதல்வர் உதயநிதியை அனுப்பிவைத்தார் முதல்வர்.  அந்த கோவை அரசு விழா முடிந்த சில மணித்துளிகளில்  அமைச்சரவை மாற்றம், பற்றிய அறிவிப்பு வெளிவந்தது. செந்தில்பாலாஜிக்கு இப்படி ஆதரவை வெளிப்படுத்திய முதல்வர்,  பொன்முடியை கடந்த சில நாட்களாக சந்திக்கக் கூட இல்லை.

பொறுப்புகளை பிரித்துக் கொடுத்த பின்னணி என்ன?

அமைச்சர்களின் ராஜினாமா பின்னணி இதுவென்றால்… புதிய பொறுப்புகளை பிரித்துக் கொடுத்த பின்னணி என்ன?

ஏப்ரல் 26 டிஜிட்டல் திண்ணையில் , ’அமைச்சர் பதவியை இழக்கும் பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் இப்போது வகிக்கும் துறைகளை புதிய அமைச்சர்களுக்குக் கொடுக்கலாம் என முதலில் ஆலோசிக்கப்பட்டது. இன்னும் தேர்தலுக்கு 9-10 மாதங்களே இருக்கும் நிலையில், அனுபவமில்லாத புதியவர்கள் அமைச்சர்களானால்  ஆட்சிக்கு எந்த சங்கடமும் வந்துவிடக் கூடாது. எனவே, இப்போது இருக்கும்  அமைச்சர்களுக்கே துறைகளை பகிர்ந்து கொடுத்துவிடலாம் என்பதை நோக்கி முதல்வரின் ஆலோசனை சென்று கொண்டிருக்கிறது’ என செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படியே புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படாமல் பழையவர்களுக்கே கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் முதல்வர் ஸ்டாலினுடைய தெளிவான கணக்கு இருப்பதாக கூறுகிறார்கள் திமுக வட்டாரங்களில்.

அதாவது செந்தில் பாலாஜி வகித்து வந்த வளமான துறைகளான டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை ஆகியவை முறையே அமைச்சர் முத்துசாமி, அமைச்சர் சிவசங்கர் ஆகியோரிடம் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது அவர் வகித்து வந்த டாஸ்மாக் துறையை முத்துசாமி தான் நிர்வகித்து வந்தார். அப்போது முத்துசாமி வசம் இருந்த டாஸ்மாக் நிர்வாகத்தில் பெரிய சர்ச்சைகள் இல்லை . அந்த அடிப்படையில் இப்போது டாஸ்மாக் துறை சவால்களை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் முத்துசாமியிடமே ஒப்படைத்திருக்கிறார் முதலமைச்சர்.

இதே போல மின்சார துறையை யாரிடம் ஒப்படைப்பது என ஆலோசிக்கப்பட்டு கடைசியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் அளித்திருக்கிறார்.

வட மாவட்ட இளம் அமைச்சர்களில் தற்போது முதல்வரின் குட் புக்கில் இருப்பவர் சிவசங்கர்.

அவரிடம் போக்குவரத்து துறை அளிக்கப்பட்ட பிறகு அவரது இரவு பகல் பாராத உழைப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி -பொங்கல் காலகட்டங்களில் வழக்கமாக பயணிகளிடம் இருந்து வசவுகளை வாங்கும் போக்குவரத்து துறை வாழ்த்துக்களை வாங்கியது.

போக்குவரத்து துறையில் சிவசங்கரின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

இது மட்டுமல்லாமல் வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாய அடையாளமாகவும், பாமகவை சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் திறம்பட கையாள்கிற அமைச்சராகவும் முதல்வரால் கருதப்படுகிறார் சிவசங்கர்.

இந்த அடிப்படையில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் வடமாவட்ட விவகாரங்களை கையாள்வதற்கு சிவசங்கருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவருக்கு போக்குவரத்து துறையோடு மின்சாரமும் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல அமைச்சரவையில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட தென் கோடி குமரி முனையைச் சேர்ந்த மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

இதற்கும் ஒரு அரசியல் கணக்கு இருக்கிறது. Sivsankar North- Mano Thangaraj South… Stalin’ new calculation

கடந்த டிசம்பர் 31 முதல்வர் ஸ்டாலின் குமரி சென்றிருந்தபோது, அனைத்து கிறிஸ்துவ பிரிவுகளின் பிஷப்புகளும் முதல்வரை சந்தித்தனர். அப்போது, ‘குமரி மாவட்டத்துக்கு இருந்த அமைச்சரை நீக்கிவிட்டீர்கள். மீண்டும் அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். முதல்வரை மீண்டும் சென்னையிலும் சந்தித்து அவர்கள் இதை வலியுறுத்தினர்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு அய்யாவழி பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் ஒரு பேட்டியளித்தார். அவர், ‘அமைச்சர் பொன்முடியை கட்சிப் பதவியில் இருந்து நீக்கிய முதல்வர், அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும். அதேநேரம், மனோ தங்கராஜை அமைச்சரவையில் இருந்து நீக்கியதற்கு முதல்வர் என்ன காரணம் என்று இன்று வரை சொல்லவில்லை. தகுதி உள்ள மனோ தங்கராஜ் இருந்தும் ஏன் அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? வெளியூர்க்கார்கள் ஏன் குமரிக்கு பொறுப்பு அமைச்சராக இருக்க வேண்டும்? உடனடியாக அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கிட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். இதுவும் முதல்வரின் கவனத்துக்கு சென்று சேர்ந்திருக்கிறது. Sivsankar North- Mano Thangaraj South… Stalin’ new calculation

அதிமுக -பாஜக கூட்டணி உருவாகிவிட்டது. விஜயும் ஒரு சக்தியாக உருவெடுத்திருக்கிறார். இந்த நிலையில் தென் மாவட்டங்களில் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிப்பதன் மூலம் தன்னுடைய பாரம்பரிய சிறுபான்மை வாக்குகளை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை என்கிறார்கள். மனோ தங்கராஜ் ஏற்கனவே மோடிக்கு எதிராக 108 கேள்விகள் என புத்தகம் எழுதி… ஸ்டாலின் அமைச்சரவையிலேயே கடுமையான மோடி எதிர்ப்பாளராக அறியப்பட்டவர்.

இந்த வகையில் தென் மாவட்டத்தில் அதிமுக- பாஜக கூட்டணி, விஜய்யின் பக்கம் செல்லும் கிறிஸ்தவ வாக்குகளை தடுத்து நிறுத்தும் உத்தியாக மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவைக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அமைச்சர் கண்ணப்பனுக்கு ஏற்கனவே தான் அளித்திருந்த வாக்குறுதிப்படி கூடுதல் துறையை அளித்திருக்கிறார் ஸ்டாலின். இதனால் கண்ணப்பனும் ஹாப்பி. சட்டமன்றத் தேர்தலில் அவரது செயல்பாடுகள் வேகம் குறையாமல் இருக்கும்.

அமைச்சரவை மாற்றத்தில் வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு திசைகளை வைத்தும் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய கணக்குகளை போட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share