மத்திய அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் அடுத்த கட்ட நிதி கொடுக்க ஆவணங்களை கேட்கின்றனர். இதில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என சொல்வதில் உண்மை இல்லை என வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 13) பாஜக தேசிய மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தமிழக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசு வஞ்சிக்கிறது என குற்றம் சாட்டியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தொடர்ச்சியாக அன்பில் மகேஷ் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார். இதற்கு மத்திய அரசு ஏற்கனவே பாராளுமன்றத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள். மாநில அரசு எடுத்துள்ள முடிவை மத்திய அரசிடம் எப்படி எடுத்து வைக்க வேண்டுமோ, அப்படி வைக்க வேண்டும்.
தமிழக கல்வித்துறையில் வகுப்புகள் இல்லாமல் இருக்கிறது, கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்கிறது, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பல இடங்களில் ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கின்றனர்.
நிறைய பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது, பள்ளிக் கல்வித் துறையில் சரியான விகிதத்தில் ஆசிரியர்கள் இல்லை.
மேலும் ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை, இந்த கேள்விகளை கேட்டால் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என சொல்கிறார்கள், அது உண்மையல்ல மத்திய அரசு கொடுக்கின்ற எத்தனையோ நிதிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்றவர் அந்த நிதியை பயன்படுத்தியதற்கான ஆவணங்களை மத்திய அரசிடம் கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்.
தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுக்கின்ற நிதியை பயன்படுத்தியதற்கான ரசீதை கொடுக்காததால் மத்திய அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் அடுத்த கட்ட நிதி கொடுக்க ஆவணங்களை கேட்கின்றனர். இதில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கின்றது என சொல்கின்றனர். இதில் எந்த உண்மையும் கிடையாது என்றார்.
