மானியக்கோரிக்கை விவாதங்களுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் அக்டோபர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியுள்ள நிலையில் பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பரபரப்பான சூழலில் தொடங்கி உள்ள இந்த கூட்டத் தொடரின் போது எந்தெந்த விஷயங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும், விவாதத்தில் பங்கேற்று யார், யார் பேசுவது என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று மனம் திறந்து பேசிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இன்று காலை சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தை புறக்கணித்து சென்றுள்ளார்.