தமிழக சட்டப்பேரவையில் பாமக குழுத் தலைவராக உள்ள ஜிகே மணியை மாற்ற வலியுறுத்தி அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாமகவின் நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி இடையேயான மோதலால் அந்த கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. பாமகவுக்கு மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் ஜிகே மணி மற்றும் சேலம் அருள் ஆகியோர் மட்டும் ராமதாஸ் அணியில் உள்ளனர். இதர பாமக எம்.எல்.ஏக்களான சதாசிவம், சிவகுமார் வெங்கடேசன் ஆகியோர் அன்புமணியின் அணியில் உள்ளனர்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் பாமக குழுத் தலைவர் ஜிகே மணியை மாற்ற வேண்டும் என ஏற்கனவே அன்புமணி ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்திருந்தனர். மேலும் சபாநாயகர் அப்பாவுவிடம் மீண்டும் நினைவூட்டல் கடிதத்தையும் 3 எம்.எல்.ஏக்கள் கொடுத்தனர்.
இதனிடையே இன்று சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி அணி பாமக எம்.எல்.ஏக்கள் 3 பேரும், ஜிகே மணியை உடனே மாற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
