கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவு திட்டமான இப்பூங்காவை கடந்த மாதம் 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் செம்மொழிப் பூங்காவை வரும் வியாழனன்று காலை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த செம்மொழிப் பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரி கமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் மற்றும் செடிகளை கொண்ட செம்மொழி வனம். நறுமண வனம், ஐந்திணை வனம், நலம் தரும் வனம், மலர்வனம், புதிர் வனம், நிழல் வனம், 1000-த்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் கொண்ட ரோஜா தோட்டம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர் தோட்டம், பாறை தோட்டம், மலர் தோட்டம். மூங்கில் தோட்டம், நட்சத்திரத் தோட்டம். பசுமை வனம் உள்ளிட்ட பல வகையான தோட்டங்கள் 38.69 ஏக்கர் பரப்பாளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோட்டங்களின் பெயர்கள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப தனித்துவமான முறையில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் QR CODE பயன்படுத்தியும், இந்த தோட்டங்களில் உள்ள மரம் மற்றும் செடி வகைகளை பற்றி தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் பண்பாட்டின் முக்கிய அடையாளமாய், தமிழ் இலக்கியங்களில் முக்கிய அங்கமாக திகழும், கடையேழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய் ஆண்டிரன், அதியன், நள்ளி, ஓரி ஆகியோரின் கற்சிலைகள், பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களின் அரசு தொல்லியல் அருங்காட்சியகம், தாவரவியல் அருங்காட்சியகம், படிப்பகங்கள், இயல் இசை நாடகம், முத்தமிழ் மற்றும் இயற்கை, பாரம்பரியம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக 500 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் என ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செம்மொழிப் பூங்கா முழுவதும் இரவில் ஜொலிக்கும் வண்ணம் அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், பொதுமக்கள் நடை பயிற்சி செய்வதற்கு கால் வலி ஏற்படாத வகையில் பிரத்தியேகமான முறையில் மண் அடுக்குகளால் அமைக்கப்பட்ட நடைபாதை, தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், மின்சார வாகனங்கள். உணவகம், ஒப்பனை அறை, பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம். மழைநீர் சேகரிப்பு மற்றும் மறு பயன்பாடு அமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்புடன் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் செம்மொழி பூங்காவை திறந்து வைத்த நிலையில் ஏராளமானோர் பூங்காவை பார்வையிட்டனர். இந்நிலையில் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்று கோவை மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் பணிகள் முழுமையாக முடிந்த நிலையில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்ட உள்ளது.
இந்நிலையில் வரும் 11ம் தேதி காலை 10.00 மணி முதல் இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இப்பூங்காவினை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.15-ம். குழந்தைகளுக்கு (10-வயதிற்குட்பட்டோர்) ரூ.5/-ம், நடைபாதை உபயோகிப்போருக்கு ஒரு நபருக்கு (மாதாந்திர கட்டணம்) ரூ. 100/-ம், கேமராவிற்கு ரூ.25/-ம். வீடியோ கேமராவிற்கு ரூ.50/-ம். திரைப்பட ஒளிப்பதிவிற்கு (நாளொன்றிற்கு) ரூ.25,000/-ம். குறும்பட ஒளிப்பதிவிற்கு மற்றும் இதர ஒளிப்பதிவிற்கு (நாளொன்றிற்கு) ரூ.2000/-ம் கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செம்மொழி பூங்கா காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
