ஏற்றுமதி உபரியில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளை விட ஒரு டிரில்லியன் டாலர் வர்த்தக உபரியுடன் உலகிலேயே சீனா முதலிடம் பிடித்துள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மாதம் எதிர்பாராத சரிவைச் சந்தித்த சீன ஏற்றுமதிகள் நவம்பரில் மீண்டு வந்து, ஒரு டிரில்லியன் டாலர் என்ற முக்கிய எல்லையைத் தாண்டியுள்ளது.
சீனாவின் ஏற்றுமதிகள் 5.9% உயர்ந்து, இறக்குமதிகள் 1.9% அதிகரித்ததால், மொத்த வர்த்தக உபரி 112 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது. இது இதுவரை இல்லாத உலக சாதனையாகும்.
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் மற்றும் சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள் இருந்தபோதிலும் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. இது அமெரிக்காவின் தேவைகளைச் சார்ந்திருப்பதை குறைத்து, சீனா தனது பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகித்து முன்னேற்றியுள்ளது என்பதையும் காட்டுகிறது. 2025ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரால் அக்டோபர் மாதம் சீனப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவிற்கான சீன ஏற்றுமதிகள் 29% சரிந்தன. இது தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக இரட்டை இலக்க சரிவாகும். ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இதுவே மிகப்பெரிய சரிவாகும்.
இருப்பினும், ஐரோப்பிய யூனியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா சந்தைகளுக்கான ஏற்றுமதி வளர்ச்சி, இந்த சரிவை ஈடு செய்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வர்த்தகப் போரைத் தொடங்கினாலும், ஆண்டின் பெரும்பகுதிக்கு வெளிநாட்டு ஏற்றுமதிகள் தொடர்ந்து அதிகரித்தன.
சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி சிறப்பாக இருந்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளுக்கான ஏற்றுமதிகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஐரோப்பிய யூனியனுக்கான விற்பனை 15% அதிகரித்தது.
இது 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகப்பெரிய வளர்ச்சியாகும். இதேபோல், ஆப்பிரிக்காவிற்கான ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 28% உயர்ந்தன. இருப்பினும், 10 நாடுகளைக் கொண்ட தென்கிழக்கு ஆசிய வர்த்தக கூட்டமைப்பிற்கான விற்பனை வெறும் 8.4% மட்டுமே அதிகரித்தது. இது பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த வளர்ச்சியாகும்.
