வங்கிகளில் வாங்கிய பல கோடி ரூபாய் கடன் தள்ளுபடி: காரணம் என்ன தெரியுமா?

Published On:

| By Santhosh Raj Saravanan

public sector banks in india write off more than 6 lakh crores in 5 years

ஐந்து ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன்களில் 6.15 லட்சம் கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளின் வாராக் கடன் தள்ளுபடி குறித்த முக்கியமான அப்டேட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுத்துறை வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 6.15 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இது கடன் வாங்கியவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்காக அல்ல; மாறாக வங்கிகளின் கணக்குகளை கிளீன் செய்வதற்காக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஐந்து நிதியாண்டுகளிலும், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் 30 வரை பொதுத்துறை வங்கிகள் மொத்தம் 6,15,647 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன என்று கூறினார்.

மேலும், 2022-23 நிதியாண்டு முதல் அரசு எந்த மூலதனத்தையும் பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யவில்லை என்றார். ஏனெனில் வங்கிகள் தங்கள் நிதி நிலையை வலுப்படுத்திக் கொண்டு, லாபம் ஈட்டி, சந்தை நிதி மற்றும் உள் வருவாயைப் பயன்படுத்தி தங்கள் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

2022 ஏப்ரல் 1 முதல் 2025 செப்டம்பர் 30 வரை பொதுத்துறை வங்கிகள் பங்கு மற்றும் பத்திரங்கள் மூலம் சந்தையில் இருந்து 1.79 லட்சம் கோடி ரூபாயை திரட்டியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். வங்கிகள் ஏன் கடன்களை தள்ளுபடி செய்கின்றன என்பதற்கான காரணத்தையும் அமைச்சர் விளக்கினார்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வாரிய ஒப்புதல் கொள்கைகளின்படி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வாராக்கடன்கள், குறிப்பாக முழுமையாக ஒதுக்கப்பட்ட கணக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

”இதுபோன்ற தள்ளுபடி, கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களின் பொறுப்பை தள்ளுபடி செய்யாது” என்று அவர் கூறினார். தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை வசூலிக்கும் பணிகள் சிவில் நீதிமன்றங்கள், கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் மற்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் உள்ள திவால் சட்டத்தின் கீழ் தொடர்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். தள்ளுபடி செய்யப்படும் கடன்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், இந்த தள்ளுபடி நடவடிக்கையால் வங்கிகளின் பணப்புழக்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

வங்கிகள் தங்கள் இருப்புநிலைக் குறிப்புகளை (balance-sheet) சீரமைக்க, வரிச் சலுகைகளைப் பெற, மூலதனத்தை மேம்படுத்த, கடன் வழங்கும் திறனை அதிகரிக்க மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை உயர்த்த இந்த தள்ளுபடி நடவடிக்கைகளை வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்கின்றன என்றார்.

மற்ற கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், இந்தியாவில் ஏற்றுமதிக்கு நிதி வழங்குவதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களே முக்கிய ஆதாரமாக உள்ளன என்றும், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள், SIDBI மற்றும் Exim வங்கி மூலம் மொத்தம் 21.71 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share