சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கோரி மனு… உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

Published On:

| By christopher

SC condemns Petitioner seeking safety of tourists

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக மலைப்பாங்கான பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை கோரிய மனுதாரரை உச்சநீதிமன்ற அமர்வு இன்று (மே 5) கடுமையாக சாடியது. SC condemns Petitioner seeking safety of tourists

கடந்த மாதம் காஷ்மீரின் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் சுற்றுலா தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, விசா ரத்து, வாகா எல்லை மூடல், துறைமுக சேவை ரத்து, சமூகவலைதளங்கள் முடக்கம் என நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது மத்திய அரசு.

ஒரு அறை கூட புக் ஆகவில்லை!

இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அங்குள்ள ரிசார்ட்கள், விடுதிகளில் இன்று வரை ஒரு அறைக் கூட முன்பதிவு செய்யப்படவில்லை என விடுதி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பஹல்காம், குல்மார்க், சோனாமார்க் பகுதிகள் இன்று வரை சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தாக்குதலுக்கு முன்பு வரை 95% விடுதிகள் நிரம்பியிருந்த நிலையில், அதற்கு பின்பு 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவுகளை ரத்து செய்தனர்.

சுற்றுலாவை மையப்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை ஈட்டிவரும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பயங்கரவாத தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, மலைப்பாங்கான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு உச்சபட்ச பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதிகபட்ச பாதுகாப்பு வேண்டும்!

அந்த மனு, நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கறிஞர் விஷால் தனது வாதத்தில், “பெரும்பாலான வட இந்திய மாநிலங்களின் பொருளாதாரம் சுற்றுலாத் துறையைச் சார்ந்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்தத் துறையின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கலாம். எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கு உச்சபட்ச நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமானது” என்று வாதிட்டார்.

மேலும் அவர், வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 வரை காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை பக்தர்கள் மேற்கொள்ள உள்ளனர். எனவே பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கோரினார்.

மனசாட்சி இல்லையா?

அவரது வாதத்தைக் கேட்ட உச்சநீதிமன்ற அமர்வு, மனுதாரர் உணர்வின்றி செயல்படுவதாக கண்டித்தது.

அவர்கள், “கடந்த முறை நாங்கள் உங்களுக்கு அறிவுரை கூறினோம் தானே? உங்கள் நோக்கம் என்ன? இந்த பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய உங்களை யார் அழைக்கிறார்கள்? உங்களுக்கு மனசாட்சி இல்லையா? பொறுப்பு இல்லையா?” என்று சரமாரியாக விமர்சித்தனர்.

தொடர்ந்து, பொது நலனுக்காக சேவை செய்யும் நோக்கம் இல்லாமல், விளம்பரத்திற்காக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அதனை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பஹல்காம் தாக்குதலை விசாரிக்க நீதித்துறை ஆணையத்தை அமைக்கக் கோரிய வழக்கறிஞர் விஷால் திவாரியின் முந்தைய மனுவும் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share