தடையை மீறி அரசு ஊழியர்களின் போராட்டம் தொடங்கியது!

Published On:

| By christopher

govt employees protest started today from kumari

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி போலீசார் தடையை மீறி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் இன்று (மே 5) சென்னையை நோக்கி இருசக்கர வாகனப் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் ’சிபிஎஸ் (Contributory Pension Scheme) ஒழிப்பு இயக்கம்’ ஆரம்பித்து கடந்த சில ஆண்டுகளாக தொடர் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் மே 5 இன்று முதல் மே 16ஆம் தேதி வரை திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் 309 ன் படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி குமரி, கோவை, இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து மூன்று குழுக்களாக சென்னைக்கு நோக்கி இருசக்கர வாகன பிரச்சாரத்தை திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீஸ் தரப்பில் நேற்று அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தடையை மீறி ஏற்கெனவே திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் உடனடியாக அறிவித்தார்.

ADVERTISEMENT

அதன்படி இன்று காலை 10 மணியளவில் குமரி மாவட்டம் களியாக்காவிளை பகுதியில் இருந்து ஜெயராஜேஸ்வர் தலைமையிலும், இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் இருந்து ரமேஷ் செல்வகுமார் தலைமையிலும், கோவை மாவட்டம் வாளையார் பகுதியில் இருந்து பிரடெரிக் ஏங்கல்ஸ் தலைமையிலும் போலீசார் தடையை மீறி போராட்டம் தொடங்கியது.

இந்த இருச்சக்கர வாகன பிரச்சாரம் இயக்கம் மூலம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டத்தில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்ய அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இறுதியாக வரும் 16ஆம் தேதி இந்த மூன்று குழுவினரும் சென்னையில் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share