பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) 3,897 வாடிக்கையாளர்களின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் ‘டார்க் வெப்பில்’ கசிந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தனித்தனியாகத் தகவல் தெரிவித்துள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. அவர்களது வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் இணையதளத்தில் வெளியாகியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து எஸ்பிஐ மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வில், டார்க் வெப்பில் இருந்த சுமார் 3.75 லட்சம் பதிவுகளில் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது.
இதில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், செல்போன் எண்கள், பிறந்த தேதிகள், மின்னஞ்சல் முகவரிகள், வீட்டு முகவரிகள், வங்கிக் கிளை மற்றும் கடன் தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், எஸ்பிஐ, இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலமாகத் தனித்தனியாகத் தகவல் தெரிவித்துள்ளது. அதில், “உங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகையும் பணமும் பாதுகாப்பாக உள்ளன என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், “வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான டிஜிட்டல் வங்கிச் சேவை நடைமுறைகளை பின்பற்ற OTP, PIN அல்லது பாஸ்வேர்டு ஆகியவற்றை யாருடனும் பகிரக் கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது. அதேபோல சந்தேகத்துக்குரிய தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ வேண்டுகோள் விடுத்துள்ளது.
