சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்களுடன் கூட்டணி பேசி வந்தார். சில நாட்களுக்கு முன்பு நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் கூட்டணி பற்றி முடிவெடுப்பதற்கு சரத்குமாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், திருநெல்வேலி தொகுதியில் அதிமுக கூட்டணியில் சரத்குமார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. சரத்குமாரும் இந்தத் திட்டத்தில் தான் இருந்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் மார்ச் 5 ஆம் தேதி காலை சரத்குமாரின் வீட்டுக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.
‘அண்ணே… நீங்க அதிமுக கூட்டணியில் இருப்பது எங்களுக்கு தென் மாவட்டத்தில் ஒரு முக்கியமான பலம். திருநெல்வேலி தொகுதியில போட்டியிடறதா உங்களுக்கு விருப்பம் இருக்கு. ஆனா எடப்பாடியார் தூத்துக்குடியில் நீங்கள் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்’ என தெரிவித்திருக்கிறார்கள்.
அதற்கு சரத்குமார், ‘யோசித்து சொல்கிறேன்’ என தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் மேலும் சிற்சில விஷயங்களும் பேசப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று மாலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் இருவரும் சரத்குமாரை அவரது வீடு தேடி சென்று சந்தித்தனர்.
’நீங்க பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு வந்துருங்க. உங்களைப் போன்ற தேசியவாதிகளுக்கு பெரிய கவுரவம் இருக்கு’ என்று சொல்லி அவர்களும் சில ஆலோசனைகளை சரத்குமாருக்கு அளித்தனர்.
இதையடுத்து நேற்று பாஜக கூட்டணியில் இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார் சரத்குமார்.
பாஜக சார்பில் நெல்லையில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதற்கு வேலைகளை தொடங்கிவிட்டார்.
அதிமுகவிடம் நெல்லையைக் கேட்டு, தூத்துக்குடி பற்றி யோசித்து சொல்கிறேன் என சொன்ன சரத்குமார், எந்த அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் சரத்குமார் சேர சம்மதித்தார் என்ற கேள்விக்கு… ‘தொகுதி ஒதுக்கீடு தவிர மேலும் பல விஷயங்கள் இருக்கின்றன’ என்று பதில் அளிக்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.
‘திமுகவுக்கு எதிராக சரத்குமாரையும் ராதிகாவையும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வைப்பதற்கு பாஜக ஏற்பாடு செய்து வருகிறது’ என்றும் கூறுகிறார்கள்.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேட்பாளர் தேர்வு: காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை!