தேர்தல் பத்திரம் முதல் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கு வரை : யார் இந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா?

Published On:

| By Kavi

தேர்தல் பத்திரங்கள் முதல் ஆர்டிக்கிள் 370 வரை பல முக்கிய வழக்குகளை கையாண்ட மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகவுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் உள்ளார். 2022ஆம் ஆண்டு பதவியேற்ற அவர், வரும் நவம்பர் 10ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.

இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை பரிந்துரைத்துள்ளார் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.

தனது பரிந்துரையை மத்திய அரசிற்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு ஒப்புதல் கிடைத்தால் உச்ச நீதிமன்றத்தில் 51ஆவது தலைமை நீதிபதியாக வருகிற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை சஞ்சீவ் கண்ணா  நீடிப்பார்.

தலைமை நீதிபதியின் ஓய்வு வயது 65. அதன்படி 2025 மே மாதம் நீதிபதி சஞ்சீவ் கண்ணா 65 வயதை அடைய இருக்கும் நிலையில் 6 மாதங்கள் இந்த உயர் பதவியை வகிப்பார்.

யார் இவர்?

1960, மே 14 இல் பிறந்த 64 வயதான நீதிபதி சஞ்சீவ் கண்ணா, டெல்லி சட்ட பல்கலையில் சட்டம் பயின்றார்.1983 இல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகச் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் அவர் திஸ் ஹசாரியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பயிற்சி பெற்றார். அரசியலமைப்பு சட்டம், நேரடி வரிவிதிப்பு, நடுவர் மன்றம், வணிக சட்டம், நிறுவன சட்டம், நில சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற பல்வேறு துறை தீர்ப்பாயங்களில் பணியாற்றியுள்ளார்.

வருமான வரித்துறையின் மூத்த நிலை ஆலோசகராக நீண்ட காலம் பதவி வகித்துள்ளார்.

2004ல் டெல்லி தேசிய தலைநகர் பிரதேசத்தில் சிவில் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.  டெல்லி உயர் நீதிமன்றத்தில், கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் அமிகஸ் கியூரியாக பல குற்ற வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார்.

2005ல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2006ல் நிரந்தர நீதிபதியானார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். எந்த ஒரு உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல், சஞ்சீவ் கண்ணா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

முக்கிய தீர்ப்புகள்!

இவர், இந்தியாவே திரும்பிப் பார்த்த பல்வேறு முக்கிய வழக்குகளை கையாண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வுகளில் இருந்துள்ளார் மற்றும் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

விவிபேட் வழக்கு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளை 100 சதவீதம் VVPAT ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு VVPAT ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று கோரிய மனுவையும் வாக்குச் சீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது.

“தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்கள் இவிஎம்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.

தேர்தல் பத்திர வழக்கு!

பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி வெளியிட்ட தரவுகள் மூலம், மத்திய விசாரணை அமைப்புகளால் ரெய்டு நடத்தப்பட்ட பல நிறுவனங்கள் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியது தெரியவந்தது.

இப்படிப்பட்ட முக்கிய வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வில் நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும் இடம் பெற்றிருந்தார். தீர்ப்பின் போது,  உச்ச நீதிமன்ற உத்தரவை எஸ்பிஐ மதித்ததாக தெரியவில்லை. நீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்திருந்தனர்.

அப்போது, நன்கொடையாளர் தனியுரிமை என்பது வங்கிகள் மூலம் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு நீட்டிக்கப்படாது என நீதிபதி சஞ்சீவ் கண்ணா அழுத்தமாக தெரிவித்தார். நன்கொடையாளர் அடையாளங்கள் பத்திரங்களைக் கையாளும் வங்கி அதிகாரிகளுக்கு ஏறக்குறைய தெரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

சட்டப்பிரிவு 370

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் சஞ்சீவ் கண்ணா இடம்பெற்றிருந்தார். இந்த வழக்கில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை சமரசம் செய்யாது என்று கூறினார்.

தகவல் அறியும் உரிமை சட்டம்


முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எல். தத்து, ஏ.கே. கங்குலி மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் நியமனம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளர் சுபாஷ் சந்திர அகர்வால் கோரிய தகவல்களை உச்ச நீதிமன்றத்தின் மத்திய தகவல் அலுவலகம் வழங்க மறுத்தது.

இதை எதிர்த்து சுபாஷ் சந்திரா தொடரப்பட்ட வழக்கில், “ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரையறைக்குள் வரும். வெளிப்படைத்தன்மை நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்காது. அதை வலுப்படுத்தவே செய்யும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்கிய அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும் இடம் பெற்றிருந்தார்.

விவாகரத்து வழக்கு
உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 2023ஆம் ஆண்டு மே மாதம் சத்தீஸ்கரைச் சேர்ந்த தம்பதியினர் தொடர்ந்த விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றம் தமக்கான அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்பின் 142 (1) பிரிவின் கீழ் விவாகரத்து வழங்கியது. விவாகரத்து பெற தம்பதி இருவரும் பரஸ்பரம் சம்மதம் தெரிவித்தால் 6 மாத கட்டாய காத்திருப்பு காலம் அவசியம் இல்லை என்று நீதிபதிகள் இந்த தீர்ப்பின் போது தெரிவித்தனர். இந்த நீதிபதிகள் அமர்விலும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா அங்கம் வகித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்


டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எந்தஒரு கோப்புகளையும் தொடுவது அல்லது முதல்வர் இருக்கையில் அமர்வது குறித்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்த நிலையில் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்விலும் சஞ்சீவ் கண்ணா இடம்பெற்றிருந்தார்.
இப்படி அதிமுக்கிய வழக்குகளை கையாண்ட சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இவர், இதுவரை மொத்தம் 456 அமர்வுகளில் 117 தீர்ப்புகளை வழங்கியுள்ளார். 24 சதவிகித கிரிமினல் வழக்குகள், . 10% சிவில் வழக்குகள். 8% அரசியல் சாசனம் சார்ந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அடுத்த வருடம் மே 13ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சுவாதி (18.10.2024 முதல் 15.11.2024 )

என்கவுண்ட்டர் விவகாரம்… கமிஷனர் அருண் விளக்கம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share