என்கவுண்ட்டர் விவகாரம்… கமிஷனர் அருண் விளக்கம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு!

தமிழகம்

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறிய விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் விளக்கத்தை ஏற்று மாநில மனித உரிமை ஆணையம் இன்று (அக்டோபர் 18)உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 5 ஆம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னை கமிஷனராக இருந்த சந்தீப் ரத்தோர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அருண் கடந்த ஜூலை 8-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

பொறுப்பேற்ற பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படுவர். முதலில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்போம். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என எச்சரித்தார்.

தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ரவுடிகள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என 28 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.  அவரைத்தொடர்ந்து ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சீசங் ராஜா ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற உதவி ஆணையர் இளங்கோவன் தலைமையிலான போலீசார், அந்த ரவுடியின் மனைவியிடம், ”உங்கள் கணவர் கத்தியை எடுத்தால் என்கவுன்ட்டர்தான்” என எச்சரித்தாராம். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து மாநில மனித உரிமை கமிஷன் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. திருவெற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோ மற்றும் ஆய்வாளர் ரஜினி ஆகியோருடன், ரவுடிகளுக்கு புரியும் மொழி என்றால் என்ன என்று நேரில் ஆஜராகி விளக்கும்படி சென்னை காவல் ஆணையர் அருணுக்கும் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

அதன்படி உதவி ஆணையர் இளங்கோ, ஆய்வாளர் ரஜினி ஆகியோர் மாநில மனித உரிமை ஆணையத்தில் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மேலும் உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் உதவி ஆணையர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்று வந்து மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

அதே நேரத்தில் சென்னை கமிஷனர் அருண் நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் ஆஜராகி நேற்று விளக்கம் அளித்தார்.

அவர், “ சென்னை மாநகர காவல் ஆணையரின் பத்திரிகையாளர் சந்திப்பானது குற்றங்களின் விளைவுகள் மற்றும் சமூகத்தில் அவற்றின் தாக்கம் குறித்தே பேசினார். சில ரவுடிகள் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளை பேசுபவர்களாக இருப்பதால் அவர்கள் மொழியில் பேசுவது என்பது தவறில்லை என்பதால், இது மனித உரிமை மீறல் ஆகாது” என்றார்.

மேலும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதை வேறு அர்த்தம் கற்பிக்கவோ கூடாது. காவல்துறை அதிகாரிகள் பங்கு மற்றும் பொறுப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை ஆகியவற்றை அறிந்துள்ளனர். எனவே காவல் ஆணையரின் பேச்சுக்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது என்றும்,

அவரது கருத்து மனித உரிமைகளை எந்த வகையிலும் மீறவில்லை. யாரையும் மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை. குற்றச் சம்பவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மட்டுமே அருண் பேசியதாகவும் வில்சன் தெரிவித்தார்.

அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், வழக்கில் இருந்து காவல் ஆணையர் அருணின் பெயரை நீக்க இன்று உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

உயிர் போகும் தருவாயில் ஹமாஸ் தலைவர் கட்டை விரலை துண்டித்த இஸ்ரேல்!- பின்னணி என்ன?

ஜிம்மில் 80கிலோ வெயிட் தூக்கிய நடிகை… படுத்த படுகையான சோகம்!

+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *