பாஜகவின் வாட்சப் யூனிவர்சிட்டி தகவல்களை எடப்பாடி பழனிசாமி அறிக்கையாக வெளியிடுகிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (மே 17) விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கல்வித்துறையில் சாதனை!
பொழுது விடிந்தால் திமுக அரசுக்கு எதிராக எந்த அவதூறைப் பரப்பலாம் எனப் பித்தாலாட்ட அரசியல் செய்யவதையே முழுநேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறார் பித்தலாட்ட பழனிசாமி.
கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய 617 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு ஒதுக்காமல் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தனது டெல்லி எசமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்.
தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பதில் திராவிட மாடல் அரசும் தமிழ்நாடு முதலமைச்சரும் எடுத்துவரும் நடவடிக்கைகளினால் பள்ளிக் கல்வியில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கி வருகிறது. RS Bharathi says Edappadi release
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்திறனை அண்மையில் வெளியான பொதுத் தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதம் சொல்லும்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் பார்த்து பார்த்து செய்யும் திட்டங்களால் இன்றைக்கு அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 74 விழுக்காடாக உயர்ந்து வரலாற்றுச் சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 விழுக்காட்டைத் தொட்டுச் சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு மீது அவதூறு!
இந்தச் சாதனைகள் எல்லாம் தமிழ்நாட்டின் மீது வன்மத்துடனும் வயிற்றெரிச்சலுடனும் செயல்படும் தமிழர் விரோத ஒன்றிய அரசுக்கு எரிச்சலூட்டுவதில் ஆச்சரியமில்லை.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய 2,152 கோடி ரூபாயை ஒதுக்குவோம் என மிரட்டியது ஒன்றிய அரசு.
மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிய இது ஒன்றும் அதிமுக ஆட்சி அல்ல, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் ஸ்டாலினின் அரசு, அந்தத் தொகையையும் மாநில அரசே ஏற்கும் என அறிவித்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காத்து நின்றது.
தமிழ்நாட்டிற்கு எப்படியாவது நெருக்கடியைத் தந்து தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி கனவை சிதைக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 617 கோடி ரூபாயை தராமல் இழுத்தடித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.
இது குறித்துப் பல்வேறு நிலைகளில் வலியுறுத்திய போதும் தலைமைச் செயலாளர் மூலம் கடிதம் அளித்துள்ள போதும் அமைதிக் காத்து தனது தமிழ்நாட்டிற்கு எதிரான தனது சதியை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த ஆதிக்கத்தைக் கேள்வி கேட்காமல் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு அரசைக் குற்றம் சுமத்தி அவதூறு பேசியிருக்கிறார். RS Bharathi says Edappadi release
பச்சைப் பொய்களை அறிக்கையாக வெளியிட்டால் அவை உண்மையாகிவிடாது என்பதை அறியாமல் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் எனும் பொறுப்பிற்குக் கொஞ்சமும் தகுதியற்ற முறையில் பாஜகவின் வாட்சப் யூனிவர்சிட்டி தகவல்களை அறிக்கையாக வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கு வரலாற்றில் இல்லாத வகையில் நிதியை ஒதுக்கி சாதனைப் படைத்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்குரிய கல்விநிதியை ஒதுக்காமல் மாணவர்களின் கல்வி உரிமையைச் சிதைக்கத் துடிக்கும் தனது டெல்லி எஜமானர்களைக் கேள்விக் கேட்க முடியாமல் பழனிசாமிக்குத் துணிவிருந்தால், உண்மையில் மாணவர்களின் நலனில் அக்கறை இருந்தால் ஒன்றிய அரசை நோக்கி கேள்வி கேட்கட்டும்.
“அமைச்சர் பெயர் முக்கியமல்ல, செயல்தான் முக்கியம்” எனத் தனது ஆட்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பெயர் கூடத் தெரியாமல்தான் விளையாட்டுத் துறை செயல்பட்டது என ஒத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
இன்றைக்கு விளையாட்டுத் துறையில் இந்தியாவை அல்ல உலகத்தையே ஈர்க்கிற வகையில் புகழ்பெற்றிருக்கிறது தமிழ்நாடு.
இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 2021 – 2022 ஆம் ஆண்டில் 225.62 கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்ட நிதி ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக உயர்ந்து நடப்பு ஆண்டிற்கு 572 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
2026 தேர்தலில் முற்றுப்புள்ளி!
இதன்மூலம் விளையாட்டுத் துறையின் உட்கட்டமைப்பை வலுவாக்கி தமிழ்நாட்டு இளைஞர்களின் திறனை உலகத் தரத்திற்கு வளர்த்து வருகிறது திராவிட மாடல் அரசு.
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை ரூ.30 லட்சமாக உயர்த்தியதோடு, இந்தத் திட்டத்தில் பயன்பெறுகிற பயனாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இன்றைக்குத் தமிழ்நாட்டின் இளைஞர்கள் உலகளவில் பல்வேறு பதக்கங்களை ஆண்டுதோறும் வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என்றால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவிகளும் உயர்தரத்துடன் வலுப்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளும்தான் காரணம்.
இன்றைக்கு உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியாவிலேயே மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள மாநிலமாகத் தமிழ்நாடே விளங்குகிறது. இச்சாதனைகளால்தான் இந்திய தொழில் கூட்டமைப்புச் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது வழங்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாமல் சீர்கெட்ட ஆட்சி நடத்திய பழனிசாமி விளையாட்டு மேம்பாட்டுத் துறையைப் பற்றியெல்லாம் பேசலாமா? தனது ஆட்சியையே தமிழ்நாட்டு உரிமைகளைப் பாஜகவிடம் அடகு வைக்கும் அடிமை விளையாட்டாக நடத்திய பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது.
2026 தேர்தலில் மற்றுமொரு படுதோல்வியைப் பரிசாகத் தந்து பழனிசாமியின் பித்தலாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் காத்திருக்கிறார்கள்” என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். RS Bharathi says Edappadi release