ராஜன் குறை BJP trying to subvert Constitution
தமிழ்நாட்டு அரசு ஆளுனர் ஆர்.என்.ரவி சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடுமையாகக் காலம் தாழ்த்துவதைக் குறித்துத் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆளுனருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதித்துத் தீர்ப்பளித்ததிலிருந்து பாஜக கட்சியைச் சேர்ந்த பலரும் சினம் கொண்டு பொங்கி வந்தனர். குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீஷ் தங்கர் உச்சநீதிமன்றம் அணுகுண்டை வீசியிருப்பதாகக் கூறினார். BJP trying to subvert Constitution
தீர்ப்பின் பகுதியாக தமிழ்நாட்டு ஆளுனர் முறையற்றுக் கையாண்டு கிடப்பில் போட்ட சட்டங்களுக்கு தானாகவே முன்வந்து ஒப்புதல் வழங்கியது உச்ச நீதிமன்றம்! ஆளுனரின் செயல்பாட்டையும் அரசியல் சட்ட த்திற்குப் புறம்பானது என்று கண்டித்தது. இருந்தும் கூட ஏற்கனவே பதவிக் காலம் முடிந்துவிட்ட ஆளுனரை விலக்கிக் கொள்ள ஒன்றிய அரசு முன்வரவில்லை. ஆளுனரும் தானாகவே முன்வந்து தன்னுடைய நடவடிக்கை கண்டிக்கப்பட்டதன் காரணமாக பதவி விலகவும் தயாராக இல்லை.
தீர்ப்பு குறித்த பாஜக-வின் இந்த அணுகுமுறை அவர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அதன் பின்னணியில்தான் ஒன்றிய அரசின் தூண்டுதலின்படி, குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திற்கு பதினான்கு கேள்விகளை சட்ட ஆலோசனை பெறும் விதமாக அனுப்பி வைத்துள்ளார். இந்த கேள்விகள் ஆளுனருக்கும், குடியரசுத் தலைவருக்கும் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் உள்ள தன்னிச்சையான உரிமைகள் என்ன, அவர்களுக்குக் காலக்கெடு விதிக்க முடியுமா என்ற மையப் பிரசினையை ஒட்டிய பதினான்கு கேள்விகளாகும்.
அரசியலமைப்பு சட்டமும் சரி, உச்சநீதிமன்றமும் சரி பலமுறை குடியரசுத் தலைவருக்கும், ஆளுனருக்கும் தன்னிச்சையாக செயல்படும் உரிமை கிடையாது, அவர்கள் ஒன்றிய மற்றும் மாநில அமைச்சரவையின் அறிவுரைப்படிதான் செயல்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளன. அப்படியிருந்தும் பிரச்சினை எங்கே வருகிறது என்றால் நாடாளுமன்றம், சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டங்களுக்கு எத்தனை நாட்களுக்குள் குடியரசுத் தலைவரோ, ஆளுனரோ ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கவில்லை என்பதில் இருந்துதான். “எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு துரிதமாக” (as soon as possible) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரையலமைப்பு சட்டம் கூறுகிறது.
நாடாளுமன்றமும், சட்டமன்றமும் சட்டமியற்றி அனுப்பினால் உடனே மறுபேச்சுப் பேசாமல் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சொன்னால் அந்த பதவிக்கு ஒரு மரியாதை இருக்காது என்பதால் சிறிய வரையறைக்கு உட்பட்டு தன்னிச்சையாக செயல்பட வழி வகுத்தார்கள். அது என்னவெனில், ஒரு சில கருத்துக்களை, பரிந்துரைகளை செய்து மறுபரிசீலனை செய்யச்சொல்லி அனுப்பலாம். அவற்றை பரிசீலித்தபின் நாடாளுமன்றம்/ சட்டமன்றம் மீண்டும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பினால் ஒப்புதல் அளிக்கத்தான் வேண்டும். எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு துரிதமாக. ஒரு மரியாதைக்காக இத்தனை நாள், இத்தனை மாதம் என்று காலக்கெடு விதிக்காமல் விட்டார்கள்.
இப்போது பிரச்சினை என்னவென்றால் காலக்கெடு விதிக்காததைப் பயன்படுத்தி அந்த சட்ட த்தை கிடப்பில் போட்டு செயலிழக்கச் செய்வதை “பாக்கெட் விடோ” அதாவது “சட்டைப்பை நிராகரிப்பு” என்று அழைக்கிறார்கள். அதாவது வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு மறந்துவிடுவது. இவ்விதம் செய்ய குடியரசுத் தலைவருக்கோ, ஆளுனருக்கோ அதிகாரம் உள்ளதா என்பதுதான் கேள்வி. இப்படிச் செய்யலாம் என்றாகிவிட்டால் பின்னர் குடியரசுத் தலைவரோ, ஆளுனரோ வைத்ததுதான் சட்டம் என்றாகிவிடுமல்லவா? மக்கள் பிரதிநிதிகளுக்கு என்ன மரியாதை? பரிசீலிப்போம்.

குடியரசுத் தலைவர் அதிகாரம்
மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டமியற்றி அரசாளும் அதிகாரம் கொண்ட அரசாங்கத்தின் தலைமை ஒன்று, சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் உச்சநீதிமன்ற தலைமை ஒன்று, அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த தலைமை ஒன்று, என இறையாண்மையை மூன்று பகுதிகளாக பிரிப்பதுதான் நவீன குடியரசுத் தத்துவம். இந்திய அரசமைப்பு சட்டம் எழுதும்போது, இந்த மூன்று பிரிவுகளை வடிவமைப்பதில் இங்கிலாந்து மாதிரியை பின்பற்றுவதா, அமெரிக்க மாதிரியை பின்பற்றுவதா என்ற கேள்வி எழுந்தது.
இங்கிலாந்தில் மன்னரிடம் குவிந்திருந்த இறையாண்மையை மூன்றாகப் பிரித்தே குடியரசு உருவெடுத்ததால் மன்னரை அலங்காரமாக, ஒரு உருவகத் தலைவராக (figurehead) அரசின் தலைவராக வைத்துக்கொண்டார்கள். மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பான்மை பெறும் கட்சி தேர்ந்தெடுப்பவரை பிரதமராக அரசாங்கத்தின் தலைவராக வைத்துக்கொண்டார்கள். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய நீதிமன்றத்தின் தலைவர் இருப்பார்.
அமெரிக்க மாதிரியில் குடியரசுத் தலைவரை மக்களே மாநில வாரியாக நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். அவரே அரசின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் இருப்பார். சட்டத்தின் ஆட்சியை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையேற்று நடத்துவார். அலங்காரத் தலைமை, உருவகத் தலைமை என்று தனியாக எதுவும் கிடையாது. இதற்குக் காரணம் அமெரிக்கா குடியேறிகளின் நாடு; அங்கே மன்னராட்சி நிலவியது கிடையாது. BJP trying to subvert Constitution
இந்தியா இங்கிலாந்து போலவே மன்னராட்சியில் ஊறிய நாடு என்பதாலும், வேறு பல்வேறு காரணங்களாலும், இங்கிலாந்து மாதிரியை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. மன்னருக்குப் பதிலாக குடியரசுத் தலைவர் என்று ஒருவர் இருப்பார்; இவர் உருவகத் தலைவராக உண்மை அதிகாரமற்றவராக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. நேரு குடியரசுத் தலைவர் உருவகத் தலைவர் (figurehead) மட்டுமே என்பதை அழுத்தம் திருத்தமாக விளக்கினார். ஏனெனில் ஒரு நாட்டிற்கு இரட்டைத் தலைமை இருக்க முடியாது. அதனால் உண்மையான அதிகாரம் பிரதமரிடம், அவர் தலைமை தாங்கும் அமைச்சரவையிடம்தான் இருக்கும்; அலங்காரத் தலைமை குடியரசுத் தலைவரிடம் இருக்கும்.
துவக்க காலத்தில் பிரதமர் நேருவுக்கும், குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திற்கும் கருத்து மாறுபாடுகள் வரத்தான் செய்தது. ஆனால் குடியரசுத் தலைவருக்கு எந்த தன்னிச்சையான அதிகாரமும் கிடையாது என்று அறிவுறுத்தப் பட்டது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆனால் பிரதமர் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து விளக்கங்களைக் கொடுத்து இணங்கச் செய்துவிடுவார். இணங்கித்தான் ஆகவேண்டும்; இல்லாவிட்டால் அரசாங்கம் செயல்பட முடியாது.
இதனைப் புரிந்துகொள்ள நாம் சட்ட நுட்பங்களுக்குள்ளோ, வரலாற்று நிகழ்வுகளுக்குள்ளோ அதிகம் போக வேண்டாம். சமீபத்தில் பாஜக அரசு வக்ஃப் சீர்திருத்தச் சட்டம் இயற்றியது. குடியரசுத் தலைவர் அதனை வாங்கி வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்தார் என்று வைத்துக்கொள்ளுங்கள். பாஜக சும்மாயிருக்குமா? இந்த சட்டத்தால் நாட்டில் பிரச்சினை வரும், மத நல்லிணக்கம் பாழ்படும் என்று குடியரசுத் தலைவர் நினைக்கலாம். அதனால் “சட்டைப்பை நிராகரிப்பு” “பாக்கெட் வீடோ” செய்யலாம். இப்படி ஒவ்வொரு சட்ட த்திற்கும் அவர் செய்யத் துவங்கினால், ஆட்சி என்னவாகும்? மக்கள் பிரதிநிதிகளின் நாடாளுமன்றத்திற்கு, அவர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கத்திற்கு என்ன மதிப்பிருக்கும்? BJP trying to subvert Constitution
நாட்டில் எவ்வளவோ கட்சிகள் இருக்கும்; நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று இருக்கும். அதனால் பிரதமர் ஒரு கட்சியை, ஒரு தரப்பை சேர்ந்தவராக இருப்பார். அனைவருக்கும் பொதுவாக ஒரு அலங்காரத் தலைமை, உருவகத் தலைமை இருப்பது நல்லது என்பதற்காகத்தான் குடியரசுத் தலைவரே தவிர அவர் சட்டங்களை சட்டப்பை நிராகரிப்பு செய்து முட்டுக்கட்டை போடுவதற்கு அல்ல. அப்படி அவர் செய்யும் சாத்தியங்கள் அதிகரித்தால் அவர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கத்தானே செய்ய வேண்டும்? BJP trying to subvert Constitution
அப்படி குடியரசுத் தலைவரால் ஒரு சட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்றால் ஆளும் கட்சி வைத்ததுதான் சட்டம் என்று பொருளா என்று கேட்கலாம். இல்லை. அங்குதான் உச்சநீதிமன்றத்தின் பணி வருகிறது. இப்போது வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பலரும் வழக்கு தொடுத்துள்ளார்கள். இந்த சட்டம் முறையானதா, அரசியலமைப்பு சட்ட த்தின் நோக்கங்களுக்கு உட்பட்டதா என்பதை உச்சநீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு வழங்கும்.
அதே போல மாநில அரசுகள் அரசியலமைப்பிற்கு எதிரான சட்டங்களை இயற்றினாலும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்கும். தவறான சட்டத்தை தடுக்கும் வேலை குடியரசுத் தலைவருக்கோ, ஆளுனருக்கோ கொடுக்கப்படவில்லை. அது உச்சநீதிமன்றத்தின் வேலை.
சுருங்கச் சொன்னால் மக்களாட்சியின் அதிகாரம் நாடாளுமன்றம்/ சட்டமன்றம்.
அரசாங்கத்தின் அதிகாரம் நாடாளுமன்ற பெரும்பான்மைத் தலைவர் பிரதமர்/முதல்வர்.
சட்டத்தின் ஆட்சியின் அதிகாரம் உச்சநீதிமன்றம். BJP trying to subvert Constitution
மூன்றிற்கும் அடிப்படை அரசியலமைப்பு சட்டம்; அதன் அடிப்படைக் கட்டுமானம் (basic structure). BJP trying to subvert Constitution
இந்த மூன்றும் இணைந்த, அரசு இயந்திரம் என்ற நிர்வாக இயந்திரத்தைக் கொண்ட அருவமான மொத்த உருவத்திற்குப் பெயர்தான் அரசு (state). அதன் உருவகத் தலைவர்தான் குடியரசுத் தலைவர். அவருக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் கிடையாது; இருக்கவும் கூடாது. இருந்தால் அது பழைய மன்னர் கால இறையாண்மையாக மாறிவிடும். மன்னராட்சி என்பது வாரிசுரிமை கிடையாது; அதிகாரக் குவிப்புதான். BJP trying to subvert Constitution
ஆளுனரின் அதிகாரம் BJP trying to subvert Constitution
தேசிய அளவிலான ஒன்றிய அரசாங்கத்திற்கு உருவகத் தலைவர் குடியரசுத் தலைவர் என்றால், மாநில அளவிலான அரசாங்கத்தின் உருவகத் தலைவர்தான் ஆளுனர். குடியரசுத் தலைவருக்கு இல்லாத அதிகாரம் எதுவும் இவருக்கு இருக்க முடியாது என்பது வெளிப்படையானது. BJP trying to subvert Constitution
குடியரசுத் தலைவருக்கும், ஆளுனருக்கும் வேறுபாடு எங்கே வருகிறது என்றால், குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். ஆளுனர் ஒன்றிய அமைச்சரவை பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுகிறார். BJP trying to subvert Constitution
இங்கேதான் ஒரு நுட்பமான பிரச்சினை வருகிறது. ஒன்றிய அரசை ஆளும் கட்சியின் விருப்பம்தான் குடியரசு தலைவர் தேர்தலில் முக்கியத்துவம் பெரும். ஏனெனில், அவர்களுக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இருக்கும். சில, பல மாநிலங்களிலும் அவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். அதனால் ஒன்றிய ஆளும் கட்சியை சேர்ந்தவரோ, அதற்கு இணக்கமானவர்களோதான் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
ஆனால் மாநில ஆளுனர்கள் நியமனத்தில் மாநில ஆளும் கட்சிக்கு எந்த பங்கும் கிடையாது. ஒன்றிய ஆளும் கட்சிதான் அவரை பரிந்துரை செய்து நியமிக்கும். மாநில ஆளும் கட்சிக்கும், ஒன்றிய ஆளும் கட்சிக்கும் கருத்தியல் வேறுபாடு இருந்தால், ஆளுனர் மூலமாக ஒன்றிய ஆளும் கட்சி மாநில ஆளும் கட்சிக்கு பல தொல்லைகளைத் தர முடியும்.
முதலில் ஆளுனர் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால் அல்லது முதல்வர் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டார் என்று கருதினால் மாநில அரசைக் கலைக்கலாம் என்று ஒரு விதி இருந்தது. இதனைப் பயன்படுத்தி எதிர்கட்சி ஆளும் மாநில அரசுகளை ஒன்றிய ஆளும் கட்சி கலைத்து வந்தது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இவ்வாறு இருமுறை, 1975-இலும், 1990-இலும், ஒன்றிய அரசால் கலைக்கப் பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் தலைமையிலான முதல் அ,இ.அ.தி.மு.க ஆட்சியும் இவ்வாறு 1980-ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. BJP trying to subvert Constitution
இது மாநில மக்களின் சுயாட்சித் தேர்வினை, மதிப்பிழக்கச் செய்வதாக இருந்ததால், உச்ச நீதிமன்றம் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் 1994-ஆம் ஆண்டு சில கடுமையான நிபந்தனைகளை விதித்தது. பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்கச் சொல்ல வேண்டும்; நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மாநில அரசைக் கலைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்; சட்டம் ஒழுங்கை சீர் செய்ய மாநில அரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பன போன்ற பல ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டன. ஆளுனரின் அடாத அதிகாரம் ஒன்று முற்றிலும் பறிக்கப்பட்டது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த முக்கிய வெற்றியாகும். BJP trying to subvert Constitution
பாரதீய ஜனதா கட்சி 2014-ஆம் ஆண்டு மோடி தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து, மாநில ஆளுனர்களை தங்கள் அரசியல் பிரதிநிதிகளாக நடத்தத் துவங்கியது. எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை காலனீய ஆட்சி போல தங்கள் மேலாதிக்கத்திற்குக் கொண்டுவர ஆளுனர்களை பயன்படுத்தத் துவங்கியது. கடந்த பதினோரு ஆண்டுகளில் மாநில அரசுகள் மீண்டும், மீண்டும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் சூழ்நிலைகள் எழுந்தன. ஆளுனர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் கடும் மோதல்கள் வெடித்தன. ஆளுனர்கள் உருவகத் தலைமையாக இருப்பதற்குப் பதிலாக போட்டி ஆட்சி நடத்தத் துவங்கினார்கள். பாஜக கொள்கைப் பிரசாரங்களை செய்தார்கள்; மாநில அரசிற்கு எதிராக பகிரங்கமாகப் பேசினார்கள். BJP trying to subvert Constitution
பாஜக கட்சியினர் ஒன்றை சிந்திக்க வேண்டும். ஆளுனர் நடந்துகொள்வதுபோல குடியரசுத் தலைவர் நடந்துகொள்ளத் துவங்கினால் என்னவாகும்? மாநில அரசிற்கு உருவகத்தலைவரான ஆளுனர் போலத்தானே, ஒன்றிய அரசிற்குக் குடியரசுத் தலைவர்? இரண்டாவது, எதிர்காலத்தில் ஒன்றிய அரசில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்தால், அன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள் பாஜக ஆளும் மாநிலங்களை இது போல ஆளுனர்கள் மூலம் கட்டுப்படுத்தினால் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்கனவே குஜராத் முதல்வராக இருந்தபோது சுயாட்சி முழக்கங்களைச் செய்தவர்தானே இன்றைய பிரதமர் மோடி?
பாஜக, அதனை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றிற்கு உண்மையிலேயே தேசப்பற்று இருந்தால் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டாட்சித் தத்துவமும், சமூக நீதியும் வலுப்பெறாமல் இந்தியா வலுப்பெற முடியாது; வளர்ச்சியடையவும் முடியாது. அவர்களது பழமைவாத, மீட்புவாத பார்வையில் அவர்கள் பேர ரசை உருவாக்கவோ, சனாதன தர்ம ம் என்ற பெயரில் வர்ண சமூகத்தை மீட்டுருவாக்கவோ முனைந்தால் இந்தியக் குடியரசு பெரும் பின்னடைவையே சந்திக்கும். உண்மையான தேசபக்தி என்பது அதிகாரக் குவிப்போ, பழமை மீட்போ அல்ல. அது உலக வரலாற்றின் திசையில் குடியரசு விழுமியங்களை உருவாக்குவதுதான். BJP trying to subvert Constitution

BJP trying to subvert Constitution
ஆளுனருக்கும், குடியரசுத் தலைவருக்கும் சட்டங்களுக்கு ஏற்பளிக்கக் காலக்கெடு விதித்தது குடியரசுத் தத்துவத்தை, கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு என்பதை பாஜக புரிந்துகொண்டு வரவேற்க வேண்டும். குடியரசுத் தலைவரையே பயன்படுத்தி மேம்படும் அரசமைப்பை சீர்குலைக்கக் கூடாது. காங்கிரஸ் பன்மைத்துவத்தை உணர்ந்ததால்தான் இந்து மகாசபாவைச் சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜிக்கும் முதல் அமைச்சரவையில் நேரு இடமளித்தார். இளம் ஜனசங்கத் தலைவர் வாஜ்பேயியை குறித்து “ இந்த இளைஞர் ஒருநாள் இந்த நாட்டின் பிரதமராவார்” என்று கூறும் பரந்த மனப்பான்மை, அரசியல் முதிர்ச்சி நேருவிற்கு இருந்தது. அந்த மனோபாவத்தைக் கொண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய முற்போக்குத் தீர்ப்பை பாஜக வரவேற்க வேண்டும். முட்டுக்கட்டை போடக்கூடாது. BJP trying to subvert Constitution
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com