உடல்நலக் குறைவால் உயிரிழந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் (46) உடல் இன்று (செப்டம்பர் 19) வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் ரோபோ சங்கர். காமராஜர் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பள்ளி, கல்லூரி காலங்களிலேயே மிமிக்ரி செய்வது, திருவிழா மேடைகளில் நடனமாடுவது என தனது திறமையை வெளிப்படுத்தியவர்.
மக்களை கவர்வதற்காக சில்வர் வண்ண சாயத்தை தனது உடம்பில் பூசிக்கொண்டு ரோபோட் போல நடனமாடியதால் இவருக்கு ரோபோ சங்கர் என பெயர் வந்தது.
இப்படி கிராமங்களில், திருவிழா மேடைகளில் மட்டும் ஏறி வந்த ரோபோ சங்கருக்கு தொலைக்காட்சிகளில் வேலை கிடைத்தது.
“ரோபோ டான்ஸ் ஆடினால் 100 ரூபாய் அல்லது 150 ரூபாய் கொடுப்பார்கள். அந்த சமயத்தில் எனக்கு ஷோ கொடுத்து, 1000 ரூபாய் கொடுத்த ஒரே ஆள் தொகுப்பாளினி அர்ச்சனாதான். இதுபோன்று கார்பரேட் ஈவெண்ட் வந்துவிட்டால் நான் தூங்கவே மாட்டேன். நைட் ஷோ படம் பார்த்திடலாம்… 4 ப்ரைட் ரைஸ் வாங்கிடலாம் என மனக்கணக்கு போட்டு சுத்தி கொண்டிருந்த நான் 2000ஆம் ஆண்டு தொலைக்காட்சிக்கு வந்தேன். என்னுடைய முதல் ஷோ அர்ச்சனாவுடன் இளமை புதுமைதான்’ என்று ஒரு பேட்டியில் ரோபோ சங்கர் கூறியிருக்கிறார்.
அடுத்தது ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் மதுரை முத்து, சிவகார்த்திகேயன் உள்ளிடோருடன் கலந்துகொண்டு அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
அது, இது, எது… சிரிச்சா போச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்துள்ளார்.
இவருடன் நடித்த சக நகைச்சுவை நடிகர்கள், ரோபோ அண்ணன் ஆட சொன்னா ஆடுவார், பாட சொன்னா பாடுவார்… எல்லா திறமையும் அவரிடம் இருக்கிறது. சின்ன பாத்திரம் என எதையும் தட்டிக்கழிக்கமாட்டார் என்கிறார்கள்.
இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்ட ரோபோ சங்கர், விஜய், விஷால், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். அவர் தீவிர கமல்ஹாசன் ரசிகர்.
இந்தநிலையில் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.
அவர் மறைந்த செய்தி அறிந்தவுடன் முதல் ஆளாய் இரங்கல் செய்தி வெளியிட்டார் கமல்ஹாசன்… ‘உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே.’ என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இன்று நேரில் வந்தும் அஞ்சலில் செலுத்தினார். அப்போது அவரது மகள் இந்திரஜா, அப்பா நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்காங்கனு பாருப்பா என்று கத்த… ரோபோ சங்கரின் மனைவி, ஆண்டவன்… ஆண்டவனு சொல்லுவியே… உன் ஆண்டவன் வந்திருக்காரு பாருப்பா என கதறியது காண்போரை கண்கலங்கச் செய்தது.
சின்னத்திரை நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை பலரும் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவே வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நடிகர் தனுஷ், சூரி, சிவகார்த்திகேயன், சத்ய ராஜ், நடிகைகள் பிரியா பவானி சங்கர், ரேகா என திரை பட்டாளமே ரோபோ சங்கருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியது. ரோபோ சங்கரின் உடலுக்கு சண்டை பயிற்சியாளரான அவரது நண்பர் ராமு பணமாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ சங்கர் உடலை காண வந்த நடிகர் கூல் சுரேஷ், துக்கத்தில் தலையில் அடித்துக்கொண்டு தரையில் படுத்து அழுது புரண்டு நடனமாடினார்.
இப்படி திரையிலும் சக நடிகை நடிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த மறைந்த ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை அவரது இல்லத்தில் இருந்து வளசரவாக்கம் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மகள் இந்திரஜா தந்தையின் இறுதி ஊர்வலத்தில் சொம்பில் நீருடன் நடந்து சென்றதை பார்த்து பொதுமக்கள் கலங்கி போனார்கள்.
அதோடு ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா மன வலியோடு, நடனமாடி தனது கணவரை வழியனுப்பினார்.
பின்னர் வளசரவாக்கம் மின் மயானத்தில் ரோபோ சங்கரின் உடலுக்கு குடும்பத்தினரும் உறவினரும் இறுதி மரியாதை செலுத்தினர் அவரது மருமகன் கார்த்திக் மொட்டை அடித்துக்கொண்டு இறுதிச் சடங்கு செய்தார். பின்னர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
குடும்பத்தினர், ரசிகர்கள், சக நடிகர்களின் கண்ணீர் வெள்ளத்தில் பிரியா விடை பெற்றார் ரோபோ சங்கர்.