மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு, 2023ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு இன்று (செப்டம்பர் 20) அறிவித்துள்ளது.
இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதா சாகேப் பால்கேவின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கெளரவமிக்க தாதா சாகேப் பால்கே மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமான மோகன்லாலுக்கு வழங்குவதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
அதில், “தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், மோகன்லாலுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக இந்திய அரசு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது! இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக புகழ்பெற்ற நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவர் கௌரவிக்கப்படுகிறார்.
அவரது ஒப்பற்ற திறமை, பல்துறை திறன் மற்றும் இடைவிடாத கடின உழைப்பு ஆகியவை இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு உலகத் தரத்தை அமைத்துள்ளன.
இந்த விருது வரும் செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “மோகன்லால் ஜி நட்சத்திர அந்தஸ்துக்கும் அவரது பல்துறைத்திறனுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பல தசாப்தங்களாக தனது சிறந்த படைப்புகளுடன், மலையாள சினிமா மற்றும் நாடகத்துறையின் முன்னணி ஒளியாக அவர் நிற்கிறார். மேலும் கேரள கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார். அவரது சினிமா மற்றும் நாடகத் திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.
தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” என பிரதமர் வாழ்த்தியுள்ளார்.
