கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று (ஏப்ரல் 21) நடந்தப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்யாசத்தில் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி.
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் இன்று மதியம் மோதின.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் 50 ரன்களும், தொடக்க வீரர் பிலிப் சால்ட் 49 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 223 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களுரூ அணியில் தொடக்க வீரர்களான கோலியும்(18), டூ பிளெஸ்ஸியும்(7) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும் அதன் பின்னர்3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ், ரஜத் பட்டிதார் ஜோடி கொல்கத்தா அணியின் பவுலர்களை சிதறவிட்டனர்.
இருவரம் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில் பெங்களூரு அணியும் 11 ஓவரில் 137 ரன்கள் குவித்திருந்தது.
இதனால் வெற்றி பெங்களூரு பக்கம் திரும்பிய நிலையில், 12வது ஓவரை வீச வந்த ரஸ்ஸல் ஒரே ஓவரில் வில் ஜாக்ஸ்(55) மற்றும் பட்டிதாரை(54) வெளியேற்றினார்.
ரஸ்ஸலை தொடர்ந்து 13வது ஓவரை வீசிய சுனில் நரைனும் தன் பங்கிற்கு களமிறங்கிய கேமரூன் க்ரீன் மற்றும் லாம்ரோர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் 155 – 6 விக்கெட்டுகள் என பெங்களூரு அணி தடுமாற மீண்டும் கொல்கத்தா அணி கை ஓங்கியது.
அதன்பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் – பிரபு தேசாயுடன் இணைந்து அதிரடியாக ஆட மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.
இருவரும் மேற்கொண்டு 33 ரன்கள் குவித்த நிலையில், பிரபுதேசாய் (24) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் வெற்றி பெங்களூரு அணிக்கு தான் என்று நினைத்த நிலையில், 3 பவுண்டரி, 1 சிக்சருடன் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 19-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் 4 பந்தில் மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு பெங்களூரு ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்தார் கர்ண் சர்மா.
எனினும் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றியை ருசித்தது.
இதன் மூலம் கொல்கத்தா அணி இந்த தொடரில் 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினயது. அதே வேளையில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7ல் தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது பெங்களூரு அணி.
மீதம் இன்னும் 6 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதே கடினமாகியுள்ளது. இதனால் இந்த முறையும் ஈ சாலே கப் நமதில்லை என்று பெங்களூரு அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘தலைவர் 171’ பட டைட்டில் டீசர் ரிலீஸ்… லோகேஷ் வைத்த ட்விஸ்ட்!
தவிக்கும் பயணிகள்… ராகுல் குற்றச்சாட்டு : தெற்கு ரயில்வே உத்தரவு!