குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு என்.டி.ஏ கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் மக்களவை மாநிலங்களவையின் ஒருங்கிணைந்த பலம் 786 ஆகும். எனவே துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் 394 வாக்குகளைப் பெற வேண்டும்.
மக்களவையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதேசமயம் மாநிலங்களவையில் 129 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆக, 786 பேரில் 422 உறுப்பினர்களின் ஆதரவு பாஜக கூட்டணிக்கு உள்ளது.
இந்தசூழலில் பாஜகவினர் எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் கேட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை விடுத்ததாகவும், இதேபோன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ தமிழர் என்ற பெருமிதத்தோடு, கட்சி பாகுபாடின்றி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என திமுக கூட்டணி தலைவர்கள் ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ராஜ்நாத் சிங் முதல்வரிடம் பேசியதாக தெரிகிறது. தேவைப்பட்டால் நான் முதல்வரைச் சந்தித்து பேசுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “2022இல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவித்தபோது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளைத் தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பட்நாயக்கிற்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவுக்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் டெல்லியில் இன்று மாலை இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.