அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி இன்று (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புரட்சி பாரதம் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாததால் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.
மேலும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார்.
தற்போது தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், பூந்தமல்லியில் இன்று செய்தியாளர்களை ஜெகன்மூர்த்தி சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “தங்களுக்கு நாடாளுமன்ற தொகுதியில் இடம் ஒதுக்காத நிலையில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததில் 90 சதவிதம் தொண்டர்கள் அதிமுகவுடன் பயணிக்கலாம் என கூறினர்.
இந்நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்ததின் பேரில் தற்போது ஆதரவு அளிக்கிறோம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுகவினருடன் இணைந்து புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். அதிமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உந்து சக்தியாக பாடுபடுவோம்.
இன்னும் மூன்று நாட்களில் அதிமுக பொதுச் செயலாளர் திருவள்ளூர் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வர உள்ளதால் சந்திக்கலாம் என தெரிவித்துள்ளார். புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்.
அதிமுக கூட்டணியில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காததால் கோபத்தில் இருந்து வந்தோம். நாங்கள் உடனடியாக தனித்து நின்று போட்டியிட கால அவகாசம் இல்லை.
ஆரம்பத்திலேயே எங்களுக்கு சீட் இல்லை என்று கூறி இருந்தால், தனித்து போட்டியிட தயாராகி இருப்போம். இன்று முதல் புரட்சி பாரதம் கட்சியினர் அதிமுகவினருடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி தொண்டர்கள் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வள்ளலார் சர்வதேச மையம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: யாரும் வெளியே வர வேண்டாம்!