சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவனும், பாஜக-பாமக கூட்டணியில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியும், அதிமுக-தேமுதிக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனும் போட்டியிடுகின்றனர். சிதம்பரத்தில் பாமக நேரடியாக போட்டியிடாததால், பாமகவின் வாக்குகளை பங்கு போடுவதற்கு அதிமுக மற்றும் திமுக பிரமுகர்கள் வேலை செய்து வருகின்றனர் என்று புலம்புகிறார்கள் தாமரை ஆதரவாளர்கள்.
கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ளடங்கிய குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதுதான் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியாகும்.
இந்த தொகுதியில் 11 லட்சத்து 26 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். 1998, 1999, 2004 ஆகிய மூன்று முறை சிதம்பரத்தில் பாமக எம்.பி-யாகவும் அமைச்சராகவும் தலித் எழில்மலையும் பொன்னுச்சாமியும் இருந்து வந்தனர் சொல்லபோனால் பாமகவின் கோட்டையாக இருந்தது சிதம்பரம் தொகுதி.
2009 இல் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விசிக வேட்பாளராக திருமாவளவன் போட்டியிட்டு 4,28,804 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக மதிமுக கம்யூனிஸ்ட் கூட்டணியில் பாமக வேட்பாளர் 3,29,721 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தேமுதிக 66,283 வாக்குகளைப் பெற்றது.
2014இல் அதிமுக வேட்பாளர் சந்திரகாசி 4,29,536 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் போட்டியிட்டு 3,01,041 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பாமக வேட்பாளர் சுதா 2,79,016 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார், காங்கிரஸ் வேட்பாளர் வள்ளல் பெருமான் வெறும் 28,988 வாக்குகளை பெற்றார்.
2019இல் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் 5,00,229 வாக்குகளைப் பெற்று 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், அதிமுக பாமக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் 4,97,010 வாக்குகள் பெற்று மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அமமுக வேட்பாளர் 62,308 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி 37,471 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் 15,334 வாக்குகளைப் பெற்றார், அதிமுக விலிருந்து பிரிந்து அமமுக வேட்பாளர் போட்டியிட்டதில் அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை வழி நடத்த முன்னாள் அமைச்சர் செம்மலையை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரன் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். குன்னம் மற்றும் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இலம்பை தமிழ்ச்செல்வன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இந்த இருவரும் குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர் சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வாக்குகளை சிதறாமல் வாங்க போராடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் புவனகிரி சட்டமன்றத் தொகுதி எம் எல் ஏ-வும், மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அருண்மொழித்தேவன், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி எம் எல் ஏ-வும் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ பாண்டியன் இருவரும் பாமக நிர்வாகிளை சந்தித்து பாமக போட்டியிட்டால் உங்களிடம் ஆதரவு கேட்க மாட்டோம். உங்கள் கூட்டணியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவதால் இந்த முறை இரட்டை இலைக்கு ஓட்டு போடச்சொல்லுங்கள் நாங்களும் வன்னியர்கள்தான் என பாமக ஓட்டுகளை வேட்டையாடி வருகின்றனர்.
பாமக வினரும் விசிக வேட்பாளரைத் தோற்கடிக்க நல்ல முடிவு என்றும், பாஜக வேட்பாளர் தண்ணீர் பாட்டில் கூட வாங்கி தரவில்லை என்ற அதிருப்தியில், அதிமுக வேட்பாளருக்கு அன்டர்கிரவுன்ட் வேலை செய்து வருகின்றனர் என்கிறார்கள் பாமக நிர்வாகிகள்.
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறன் கொஞ்சமாவது தலித் வாக்குகளை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகிறார். மேலும் தடா பெரியசாமி பாஜகவிலிருந்து அதிமுகவில் இணைந்திருப்பதும் தலித் வாக்குகளைப் பெற உதவும் என்று அதிமுக வலுவாக நம்புகிறது.
பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள்தான் ஓடி ஓடி வருகின்றனர். கரன்சி கஷ்டத்தால் கூட்டணிக் கட்சியில் உள்ள நிர்வாகிகளை கவனிக்க முடியாமல் தவித்து வருகிறார். கூட்டணிக் கட்சியான பாமக நிர்வாகிகளும் பாமக வேட்பாளர்கள் போட்டியிடும் கடலூர் மற்றும் மயிலாடுதுறை தொகுதிக்கு போய்விடுகிறார்கள் என்று புலம்புகிறார்கள் பாஜக நிர்வாகிகள்.
விசிக வேட்பாளர் திருமாவளவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் சிவசங்கர் இருவரும் போராடி வருகின்றனர். குறிப்பாக சிவசங்கர் குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பாமக நிர்வாகிகளை அன்பாக அழைத்து பாஜக வேட்பாளருக்கு வேலை செய்யாத அளவுக்கு ஆப் செய்து வருபவர். அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து நானும் உங்கள் சமுதாயம்தான், எனக்காக பானைக்கு வாக்களியுங்கள், இல்லை என்றால் நீங்கள் யாருக்கும் வாக்களிக்காமல் சைலன்ட்டாக இருங்கள் என்று திமுகவின் வன்னியர்கள் வாக்குகளையும் சிதறாமல் சேகரித்து வருகிறார்.
சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திமுகவின் வன்னியர்களின் வாக்குகள் முந்தைய தேர்தல் போல் குறைந்து விடக்கூடாது, இந்த தேர்தலில் அதிகமாக பெற்றாக வேண்டும் என்று போராடி வருகிறார்.
வேட்பாளர் திருமாவளவன், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கார்டு இருக்காது, இட ஒதுக்கீடு இருக்காது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் இருக்காது, இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் விலைவாசி குறையும், வேலை வாய்ப்புகள் பெருகும் என பேசி வாக்குகளை சேகரித்து வருகிறார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி எப்படி உள்ளது யார் யார் என்ன கணக்கு போட்டு வருகிறார்கள் ஒரு அலசல் பார்ப்போம்.
புவனகிரி, காட்டுமன்னார்கோயில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் பட்டியலினத்தவர் வாக்குகள் அதிகமாக உள்ளது. மீதமுள்ள சிதம்பரம், குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர் சட்டமன்றத் தொகுதிகளில் வன்னியர்கள் வாக்குகள் அதிகமாக உள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் வன்னியர்கள் வாக்குகள் 32 %, பட்டியலினத்தவர் 27 %, முஸ்லிம் 5%, கிறிஸ்துவர் 4%, யாதவர் 2 %, முதலியார் 2 %, நாயுடு 1% சதவீதம் மற்ற சமூகத்தினர் 27% சதவீதம் இருப்பதால், பாஜக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி விசிக வேட்பாளரும் அதிமுக வேட்பாளரும் தேர்தல் களத்தில் இருந்து வருகின்றனர்.
தடா பெரியசாமியின் வருகை தங்களுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று அதிமுக வேட்பாளரும், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் சிவசங்கர் ஆகியோரின் முயற்சியால் வன்னியர்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று திருமாவளவனும் கணக்கு போட்டு வருகிறார்கள். எங்கு தனக்கு பாமகவின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமோ என்று பாஜக தரப்பு குழப்பத்தில் உள்ளது.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிடிவி தினகரன் Vs தங்க தமிழ்செல்வன்…தேனியின் லேட்டஸ்ட் நிலவரம் என்ன?
டிஜிட்டல் திண்ணை: வெறுங்’கை’ வேட்பாளர்கள்… வெறுப்பில் அமைச்சர்கள்… ஸ்டாலின் உத்தரவு!
”கச்சத்தீவு பற்றிய ஆர்.டி.ஐ பச்சைபொய்” – பழனிவேல் தியாகராஜன்