கொரோனா பெருந்தொற்று காலத்தை போல இப்போது நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் -அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மேற்காசியா போர் சூழல் குறித்து மக்களவையில் பிரதமர் மோடி இன்று (மார்ச் 23) பேசினார்.
அவர் கூறுகையில், “உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான எரிசக்தி இருப்பு இந்தியாவிடம் உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் பணியாற்றி வருகிறது.
இந்த நெருக்கடி மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இது உலகப் பொருளாதாரம் மற்றும் மனித உயிர்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இந்தப் போர் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார, தேசியப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அழுத்தங்களை உருவாக்கியுள்ளது. போரிடும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இந்தியா விரிவான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. மோதல் பகுதி முக்கிய வர்த்தகப் பாதைகளில் அமைந்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளின் பெரும் பங்கு இந்தப் பகுதியாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.
போர் தொடங்கியதிலிருந்து பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டது. பெரும்பாலான மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் இரண்டு முறை பேசியுள்ளேன். அவர்கள் அனைவரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து முழுமையான உறுதி அளித்தனர். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்படுகிறது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. போர் தொடங்கியதிலிருந்து 3,75,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளனர்.” என்றார்.
எரிசக்தி விநியோகம் குறித்த முக்கியப் பிரச்சினைக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, “பெருமளவிலான கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவை வந்தடைகின்றன. போருக்குப் பிறகு அந்த ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து மிகவும் சவாலானதாக மாறியுள்ளது .
இந்த நிலையில் சாதாரண குடும்பங்களைச் சிரமங்களிலிருந்து பாதுகாப்பதிலேயே அரசின் கவனம் இருந்து வருகிறது. வீட்டு உபயோகத்திற்கு எல்பிஜிக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் அதன் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்யத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் போரினால் ஏற்பட்ட கடினமான உலகளாவிய நிலைமைகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும். இந்தப் போரினால் ஏற்பட்ட கடினமான உலகளாவிய நிலைமைகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும். கோவிட்-19 பெருந்தொற்றின் போது தேசம் ஒன்றுபட்டு நின்றதைப் போலவே, தற்போதும் தயாராகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். பொறுமை, நிதானம் மற்றும் விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பொய்களைப் பரப்புதல், கள்ளச்சந்தையில் ஈடுபடுதல் அல்லது பதுக்கல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டின் ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றிணைந்து நடக்கும்போது, நாம் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள முடியும். இதுவே நமது அடையாளம், இதுவே நமது பலம்” என்று கூறினார்.
