போர் தொழில் திரைப்படம் தமிழ்நாட்டில் கடந்த 14 நாட்களில் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளது.
சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், ஹரீஷ் குமார், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘போர் தொழில்’. இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருந்தார். ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த போர் தொழில் திரைப்படத்திற்கு படம் வெளியான நாள் முதலே நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன.

விஷ்ணு விஷால் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படத்திற்கு பிறகு அதைப்போன்ற சிறந்த த்ரில்லர் படத்தை பார்த்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
பாடல்கள், பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள் ஏதும் இல்லாமல் கதையை நம்பி அதனை சமரசமில்லாமல் திரைமொழியில் படமாக்கியிருந்தார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா.
போர் தொழில் வெளியான அன்று சித்தார்த் நடித்த டக்கர் படம் வெளியானது. முதல் வாரத்தில் டக்கர் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது.
ஆனால் போர் தொழில் ரீலீஸ் செய்யப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் இரண்டாவது வாரத்தை தொடர்ந்ததுடன் குறைவான காட்சிகள் ஓடிக்கொண்டிருந்த திரைகளில் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டன.

மே 12ம் தேதி வெளியான குட் நைட் படத்திற்கு பின் படம் வெளியான திரையரங்குகளில் இரண்டாவது வாரமும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் அதிகரித்து ஓடிய படம் போர் தொழில் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய படங்கள் ஜூலை 16 அன்று வெளியானபோதும் அவற்றையெல்லாம் ஓரங்கட்டி வெளியான திரைகளில் போர் தொழில் கல்லா கட்டியிருக்கிறது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
9 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வெளியான போர் தொழில் திரைப்படம் கடந்த 14 நாட்களில் தமிழகத்தில் சுமார் 30 கோடி ரூபாயை மொத்த வசூல் செய்திருக்கிறது.
இராமானுஜம்