பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம்!
பிகாரில் இன்று (ஜூன் 23) மதியம் 12 மணிக்கு எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் செயல்பட்டு வந்தார்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கடந்த ஜூன் 12ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முக்கிய நிகழ்ச்சிகள் இருந்ததால் இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று பிகார் மாநில முதல்வர் அறிவித்தார்.
அதன்படி மதியம் 12 மணியளவில் பிகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் துவங்கியது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன்,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்,
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முஃப்தி, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் மற்றும் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் வகுப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம்” – ராகுல் காந்தி
கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை!