வைஃபை ஆன் செய்ததும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது தொடர்பான ‘டிரைலர்’ அறிவிப்பு வெளியாகிறது என்ற பீடிகையுடன் மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். PMK to Contest Alone?
திண்டிவனம் கேஆர்எஸ் யின் அம்மா திருமண மண்டபத்தில் பாமக பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம முத்துக்குமார் தலைமையில் நேற்று மே 26-ந் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பொதுச் செயலாளர் ராம முத்துக்குமார், என்னுடன் 45 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இருந்தபோதிலும் அவரால் சட்டமன்றத்துக்கு செல்ல முடியவில்லை.. அடுத்த முறை ஜிகே மணியுடன் அவரும் சட்டமன்றத்துக்கு செல்ல நாம் உழைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக மாமல்லபுரம் மாநாட்டில் பேசிய டாக்டர் ராமதாஸ், தனித்துப் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் நாம்.. கூட்டணி அமைத்தே 5 இடங்களில்தான் ஜெயித்திருக்கிறோம்.. இது வெட்கமாக இல்லையா? என பாமக தனித்துப் போட்டியிடுவது குறித்து சூசகமாகப் பேசியிருந்தார்.
மாமல்லபுரம் மாநாட்டுக்குப் பின் டாக்டர் ராமதாஸ் தொடர்ச்சியாக, பாமக இளைஞர் அணி, பாமக மகளிர் அணி, பாமக மாநில நிர்வாகிகள், பாமக மாணவர் அனி, வன்னியர் சங்கம், பாமகவின் வழக்கறிஞர் அமைப்பான சமூக நீதிப் பேரவை, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை, பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், உள்ளிட்ட தரப்பினருடன் ராமதாஸ் தீவிர ஆலோசனைகளை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டங்களிலுமே, நாம தனியாக நின்றாலே 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிக்க முடியும்.. அதற்கான டிரிக் என்னிடம் இருக்கிறது என்பதை தொடர்ந்து பேசி வந்தார் ராமதாஸ்.
இதன் தொடர்ச்சியாக நேற்று திண்டிவனம், பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம், வியாழக்கிழமையன்று உங்களை சந்திப்பேன்.. அப்போது பேசுகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு போனார் ராமதாஸ்.

இது பற்றி பாமக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே பிரச்சனையை தீர்த்து வைக்க ராமதாஸின் மகள் கவிதா பேச்சுவார்த்தை நடத்தினார். வன்னியர் சங்கத்தின் தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுவார்; பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நீடிப்பார் என்ற முடிவுக்கு இருதரப்பும் இணக்கம் தெரிவித்துவிட்டது. இந்த பஞ்சாயத்து முடிவடைந்ததால்தான் டாக்டர் ராமதாஸ் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் என்கின்றனர்.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாமகவின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் டாக்டர் ராமதாஸ் களமிறக்கும் திட்டம்தான் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டமாம். 1987-ம் ஆண்டு வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட- தமிழ்நாட்டையே ஒரு வார காலம் திரும்பிப் பார்க்க வைத்த- 21 உயிர்களை பலி கொடுத்த- அந்தப் போராட்டத்தை விட தீவிரமான ஒரு போராட்டத்தை தற்போது 10.5% இடஒதுக்கீட்டுக்காக நடத்த வேண்டும் என உறுதியாகச் சொல்லி இருக்கிறாராம் ராமதாஸ் என்றும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை ஒரு ஆலோசனையாக மட்டும் சொல்லவில்லையாம். வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு போராட்டத்தை மிக தீவிரமாக நடத்த வேண்டும்; அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு யாருக்கேனும் எந்த பாதிப்பும் வந்தால் அவர்களுக்கு எப்படி எல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.. சிறைக்கு போக நேர்ந்தால் ஜாமீனில் வெளியே கொண்டு வர வேண்டும்.. வேறு பாதிப்புகள் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும்.. இதற்கான ஏற்பாடுகளை செய்வதிலும் டாக்டர் ராமதாஸ் தீவிரமாக இருக்கிறார் என்கின்றனர் வன்னியர் சங்க புள்ளிகள்.
அத்துடன், டாக்டர் அய்யாவைப் பொறுத்தவரையில் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு. தம்முடைய அரசியல் அனுபவத்தின் அடிப்படையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு சட்டமன்றம்தான் அமையும் என கணித்திருக்கிறாராம் ராமதாஸ்.
அப்படி தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் என்பதால் பாமகவிடம் கணிசமான எம்.எல்.ஏக்கள் இருக்க வேண்டும் என கணக்குப் போடுகிறாராம் டாக்டர்.
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை இல்லை. அன்றைக்கு காங்கிரஸ் ஆதரவே திமுகவுக்கு போதுமானதாக இருந்தது; அதனால் அதிகாரத்தில் பாமக பங்கு கேட்கவில்லை.. இந்த முறை அப்படி இருக்க முடியாது; அதிகாரத்தில் இடம் பெற வேண்டும்; அதற்கு பாமகவிடம் கணிசமான எம்.எல்.ஏக்கள் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்தில்தான் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என முனைப்புடன் ஆலோசனைகளை நடத்துகிறார் டாக்டர் ராமதாஸ் என்கின்றனர் பாமக சீனியர்கள்.

மேலும், டாக்டர் ராமதாஸ் அதிமுக கூட்டணிக்குப் போக வேண்டும் என்ற விருப்பத்தைத்தான் முன்னர் கொண்டிருந்தார். ஆனால் ஏன் பாமகவால் தனித்து போட்டியிட்டு ஜெயிக்க முடியாதா? அதுவும் தொங்கு சட்டமன்றம் அமையும் என்கிற சூழ்நிலையில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான எம்.எல்.ஏக்கள் கைகளில் இருந்தால் அதிகாரம் நம் வசமாகுமே
என கணக்குப் போடுகிறாராம் டாக்டர் ராமதாஸ்.
இதனால்தான் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசும் டாக்டர் ராமதாஸ், நாம் 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிக்க என்னிடம் ஒரு டிரிக்ஸ் இருக்கிறது.. அதை அப்புறமாக சொல்கிறேன் என பொடி வைத்தும் பேசுகிறார். இந்த பேச்சுகள் அனைத்துமே பாமக, தனித்துப் போட்டியிட்டே கணிசமான எம்.எல்.ஏக்களைப் பெற்று அதிகாரத்தில் இடம் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்கை நோக்கித்தான் என்கின்றன பாமக வட்டாரங்கள்.
இந்த தனித்துப் போட்டியிடும் திட்டம் தொடர்பாகத்தான் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் மறைமுகமாக குறிப்பிட்டு சில விஷயங்களைப் பேசப் போகிறார் எனவும் தைலாபுரம் தோட்டத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

டாக்டர் அன்புமணி ராமதாஸைப் பொறுத்தவரையில், பாஜக+ அதிமுக கூட்டணி என்பதை விரும்புகிறாராம். இப்போது தமது எம்பி பதவி காலம் முடிவடையும் நிலையில் அதிமுக தரப்பில் பேசியிருக்கிறாராம் அன்புமணி. ஆனால் அதிமுக தரப்போ, எங்களுக்கான 2 எம்பி சீட்டுகளைத்தான் உங்களுக்கும் ஜிகே வாசனுக்கும் கொடுத்தோம்.. நீங்கள் இருவருமே மக்களவைத் தேர்தலின் போது எங்களுக்கு எதிராகத்தான் இருந்தீர்கள். அதனால் இந்த முறை உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லிவிட்டதாம். இதேபோல திமுக தரப்பிலும் அன்புமணிக்கு எம்பி சீட் வாய்ப்பு இல்லை.
சரி.. அடுத்ததாக தமிழக பாஜகவில் என்ன பிரச்சனை?
தமிழக பாஜகவின் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட போது, முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இதில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தனர்.
ஆனால் காலங்கள் மாற காட்சிகளும் கோலங்களும் மாறிவிட்டன. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜகவில் சொந்த கட்சித் தலைவர்களையே இழிவுபடுத்துகிற- கூட்டணி கட்சித் தலைவர்களை அவமானப்படுத்துகிற ‘வார் ரூம் அரசியல்’ இனி எடுபடாது; அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; கூட்டணி கட்சியான அதிமுகவின் தலைவர்களை யாருமே விமர்சிக்கக் கூடாது என கட்டளையிட்டார்.
பாஜகவின் வார் ரூம் அரசியல் என்பது அண்ணாமலை காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் வெளிப்படையாகவே வார் ரூம் அரசியலைப் பற்றிப் பேசினார் நயினார்.
நயினார் நாகேந்திரனின் இந்த அறிவிப்பு வந்ததுதான் தாமதம்.. சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள், புதிய புதிய வார் ரூம்களை திறந்து வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். இதனால் நயினார் நாகேந்திரன் கடும் அப்செட்டாம்.
இதனைத் தொடர்ந்து நேற்று ஒரு சம்பவம் அரங்கேறி டெல்லி வரைக்கும் புகார் போயிருக்கிறதாம்.
சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு- ஒரே தேர்தல் கருத்தரங்கம் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு அண்ணாமலை அழைக்கப்படவில்லையாம்.. அண்ணாமலையின் படம் எதுவுமே எந்த போஸ்டரிலும் இல்லையாம்.. இதனால் கொந்தளித்துப் போன ‘அண்ணாமலை ஆர்மி’ சமூக வலைதளங்களில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களைக் கொட்டித் தீர்த்தன. அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு செல்லமாட்டார்கள் என்கிற தகவலையும் பரப்பிவிட்டனர்.

இந்த நிலையில் 2,000 நாற்காலிகள் போடப்பட்டு கருத்தரங்கம் காலை 10 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் கூட்டமே வராததால் வெறும் 500 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டன. அப்போதும் கூட்டம் சேராத நிலையில் வேறு வழியே இல்லாமல் முற்பகல் 11.30 மணிக்குதான் கருத்தரங்கமே தொடங்கியதாம்.

இதில் பேசிய பவன் கல்யாண், தமிழ்நாட்டின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. எனக்குப் பிடித்த எம்.ஜி.ஆர், வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு, தமிழ் கடவுள் முருகன் இருக்கும் பூமி இது.

ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என முன்மொழிந்தது அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி. இது கலைஞரின் கனவு, அவரின் சிந்தனை. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்ப்பவர்கள் கலைஞர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை படிக்க வேண்டும். ஆனால் அப்பாவின் கனவு நிறைவேறக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார் என சரவெடியாய் பேசினார்.
ஆனால் சென்னை நிகழ்ச்சி முடிந்த கையோடு, பக்கம் பக்கமாய் டெல்லி பாஜக மேலிடத்தில் புகார் பட்டியல் வாசித்திருக்கிறாராம் பவன் கல்யாண். டெல்லி பாஜக தலைவர்களிடம் பேசிய பவன் கல்யாண், நடிகர் விஜய்க்கு போட்டியாகத்தான் தமிழ்நாட்டில் கூட்டங்களில் பேச வேண்டும் என்னை டெல்லி பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கேற்ப சென்னை கருத்தரங்கில் பேசுவதற்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்தான் என்னை தொடர்பு கொண்டு அழைத்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முறையாக ஏற்பாடு செய்யவில்லை. எந்த ஏற்பாடுமே இல்லாமல் பெயரளவுக்கு ஒரு கருத்தரங்கை நடத்தி என்னை பேச வைத்துவிட்டதாக குமுறிவிட்டார் என டைப் செய்தபடியே Sent பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.