பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல்கள் உக்கிரமடைந்து கொண்டிருந்தாலும் சமாதான முயற்சிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். Ramadoss Set to Launch Next Move Against Anbumani
பாமகவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என ஒவ்வொரு தரப்பிலும் நாம் விசாரித்தோம்.
டாக்டர் ராமதாஸ் தரப்பைப் பொறுத்தவரையில், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கித் தந்ததில் இருந்தே தமக்கு சரிவு தொடங்கிவிட்டது என்கிற ஆதங்கத்தை கொட்டுகிறாராம் ராமதாஸ். பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அன்புமணி பக்கம் அதிகமாக இருக்கலாம்; அவர்களை எல்லாம் பணம் கொடுத்து அன்புமணி தக்க வைத்துக் கொள்ளலாம். ஆனால் தாம் சொன்னால்தான் வன்னியர்கள் ஓட்டு போடுவார்கள்; ஆகையால் மக்களை சந்திக்க போகிறேன்.. நீதிமன்றத்துக்கு அவர்கள் போனாலும் அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என்கிறாராம் டாக்டர்.
தைலாபுரம் தோட்டத்து வட்டாரங்களில் விசாரித்த போது, அப்பா- மகன் இடையே வழக்கம் போல மகள் கவிதா சமாதானப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறாராம். அன்புமணியிடமும் அப்பாவுக்கு எதிராக எதுவும் பேசிவிட வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லி இருக்கிறாராம். பாமக இளைஞரணித் தலைவர் பதவியில் இருந்து விலகிய முகுந்தனும் ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார். ஆனால் அன்புமணியோ அக்கா காந்திமதி, அவரது கணவர் பரசுராமன், மகன் முகுந்தன் ஆகிய அனைவரும் எங்க பக்கம் வந்துடுங்க.. நடப்பதைப் பார்க்கலாம் என பதில் தந்திருக்கிறாராம்.
மேலும், இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமே அன்புமணியின் மனைவி சவுமியாவின் குடும்பம்தான்.. சவுமியாவின் அப்பா, அவரது சகோதரர் இவர்கள்தான் பிரச்சனையை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்கிற குமுறலும் ராமதாஸ் தரப்பில் அதிகம் இருக்கிறதாம். இதனால்தான் இன்றைய பிரஸ் மீட்டில் சவுமியா அன்புமணியையும் சேர்த்தே ராமதாஸ் விமர்சித்தார் என்கின்றன தைலாபுரம் வட்டாரங்கள்.
சரி.. அன்புமணி தரப்பு என்ன மூவ் செய்து கொண்டிருக்கிறது என விசாரித்த போது, ராமதாஸ் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார். நாம நம்ம வேலையைப் பார்ப்போம் என்கின்றனராம். மேலும் அன்புமணி ஆதரவு மூத்த வழக்கறிஞர்கள் சிலர், பாமகவுக்கு உரிமை கோரி நீதிமன்றத்துக்கு போகலாம் என்கிற யோசனையையும் முன்வைத்தனராம். ஆனால் அன்புமணி தரப்போ, நம்மிடம்தான் கட்சியின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் அதிகமாக உள்ளனர். பொதுக்குழுவைக் கூட்டி தலைவராக அறிவிக்கப்பட்டவர் அன்புமணி. பொதுக்குழு இப்போது கூட்டப்பட்டாலும் அன்புமணிக்குதான் அதிகமான ஆதரவு இருக்கும். அதனால் நாம் ஏன் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும்? அது எல்லாம் தேவையில்லை.. எதைப் பற்றியும் கவலைப்படாமல் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தை நடத்துவோம்; பாஜகவுடனான கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என ‘அசால்ட்’ மனநிலையில் இருக்கின்றனராம்.
பாமகவினர் மற்றும் கிராமங்களில் உள்ள வன்னியர் சங்க நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, அப்பா- மகன் இடையே நடக்கும் சண்டையால் பாதிக்கப்படப் போவது வன்னியர்கள்தான். வன்னியர்களுக்கான ஒரே கட்சியான பாமகவில் அதுவும் டாக்டர் ராமதாஸ் குடும்பமே அடித்துக் கொண்டிருந்தால் அரசியல் களத்தில் வன்னியர்களுக்கு என்னதான் மரியாதை கிடைக்கும் என குமுறுகின்றனர்.










