சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கருத்தரங்கு கூட்டம் இன்று (மே 26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். nainar nagendran says pawan kalyan
கருத்தரங்கில் பேசிய நயினார் நாகேந்திரன், “பவன் கல்யாண் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தந்து எங்களோடு இணைந்து செயல்பட வேண்டும். தமிழுக்கும் தெலுங்கிற்கும் நிறைய தொடர்புகள் உண்டு.

பாரதியார் தமிழ் மொழியை புகழ்ந்து பேசியதை போல, சுந்தர தெலுங்கனின் பாட்டிசைத்து தோனிகள் ஓட்டி விளையாடுவோம் என்று பாடியிருக்கிறார். தமிழகமும் ஆந்திராவும் ஒரே கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை கொண்டது. அந்நியர்களை எதிர்த்து இரண்டு மாநிலங்களும் சேர்ந்தே போராடியுள்ளது.
ஆந்திராவில் என்.டி.ஆர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். இருவருக்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது. அதேபோல, புதிய எம்.ஜி.ஆராக புதிய வரவாக பவன் கல்யாண் நம்மோடு பவனி வந்திருக்கிறார். அவருடைய வரவு நல் வரவாக வேண்டும்” என்று பேசியிருந்தார்.
பவன் கல்யாணை புதிய எம்ஜிஆர் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டதால், அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், எம்ஜிஆருக்கு சற்றும் இணையில்லாத பவன் கல்யாணை புதிய எம்ஜிஆர் என்று கூறியதற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
அதேவேளையில், இந்த கருத்தரங்கில் பேசிய பவன் கல்யாண், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்ஜிஆர் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. nainar nagendran says pawan kalyan