பிரதமர் மோடி ஜூலை 27-ல் தமிழகம் வருகை- கங்கை கொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்பு!

Published On:

| By Mathi

Gangaikonda Cholapuram PM Modi

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ந் தேதி தமிழகம் வருகை தருகிறார். Modi Gangaikonda Cholapuram

பிரதமரின் பயணம் தொடர்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த தினத்தையும், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் 1000-வது ஆண்டையும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையிலும் ஆடித் திருவாதிரை திருவிழாவாக ஜூலை 23 முதல் ஜூலை 27 வரை மத்திய அரசு கலாச்சார அமைச்சகம் கங்கைகொண்ட சோழபுரத்தில் கொண்டாடுகிறது.

இத்திருவிழா கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தஞ்சாவூரில் உள்ள தென் மண்டல கலாச்சார மையத்தின் ஆதரவுடன் பயிற்சி பெற்ற மாணவர்களின் தேவாரம் திருமுறை மற்றும் கலாஷேத்ரா கலைஞர்களின் நிகழ்ச்சி உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுடன் 23-ம் தேதி மாலை தொடங்குகிறது.

இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சோழ சைவம், கோயில் கட்டடக்கலை பாரம்பரிய நடைபயணம் மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய பயணங்கள் குறித்த கண்காட்சியை நடத்துகிறது.

ADVERTISEMENT

ஜூலை 27 அன்று நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மற்றும் பிரமுகர்கள், உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள தேவாரம் பாடல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவுள்ளது.

27-ம் தேதி அன்று கலாஷேத்ராவின் பரதநாட்டிய குழு நிகழ்ச்சியும், பாரம்பரியமிக்க ஓதுவார்கள் குழு தேவாரம் திருமுறையை ஓதும் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது. அத்துடன் பத்மபூஷன் இளையராஜா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

சைவ சித்தாந்தத்தின் செழுமையான தத்துவ பாரம்பரியத்தையும், தமிழின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டுவது, சைவ சமயத்திற்கு நாயன்மார்களின் பங்களிப்பை கொண்டாடுவது, சைவ சமயத்திற்கு ராஜேந்திர சோழன் மற்றும் சோழர்கள் ஆற்றிய பங்களிப்பை கொண்டாடுவது ஆகியவை இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இவ்வாறு மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share