பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை மீண்டும் விவரிக்கும் வகையில் ‘மா வந்தே’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (செப்டம்பர் 17) வெளியாகியுள்ளது.
மத்தியில் 2014 ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசியல் தொடர்புடைய படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் எதிர்க்கட்சி மற்றும் அதன் தலைவர்களை விமர்சிக்கும் வகையில்
தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் (2019), எமர்ஜென்சி (2025) ஆகிய படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தினர். அதே நேரத்தில் பாஜக தலைவர்களை போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி (2019), மெயின் அடல் ஹூன் (2024), சுதந்திர வீர் சாவர்க்கர் (2024) ஆகியோரின் படங்கள் வெளியாகின.
அதோடு தி காஷ்மீர் ஃபைல்ஸ் (2022), கேரள பைல்ஸ்(2023), பிரிவு 370 (2024), சபர்மதி அறிக்கை (2024), ராம் சேது (2022) மற்றும் பெங்கால் பைல்ஸ் (2025) ஆகிய படங்கள் வெளியாகின.
இப்படங்கள் பெரும்பாலும் மத வெறுப்பை தூண்டும் வகையிலும், பொய் குற்றச்சாட்டுகளுடன் வரலாற்று திரிபுகளை செய்யும் வகையிலும் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாக விமர்சகர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளான இன்று, அவரது வாழ்க்கையை விவரிக்கும் வகையில் “மா வந்தே” என்ற வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வீர் ரெட்டியின் சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில் ’பல போராட்டங்களை விட, ஒரு தாயின் மனவலிமை பெரிது’- நரேந்திர மோடி கருத்து இடம்பெற்றுள்ளது.
ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான “பி.எம். நரேந்திர மோடி’ வெளியானது. ஓமுங் குமார் இயக்கிய இப்படத்தில் பிரதமராக விவேக் ஓபராய் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தில் மோடியின் “குழந்தைப் பருவத்திலிருந்து தேசத்தின் தலைவராக மாறுவது வரை அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடியுடனான அவரது உறவை குறிப்பாக பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திநவீன VFX தொழில்நுட்பத்துடன் தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட உள்ள இப்படத்தில் பிரதமர் மோடி கதாப்பாத்திரத்தில், மார்கோ, கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
கிராந்தி குமார் எழுதி இயக்க உள்ளார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் கே.கே. செந்தில் குமார், இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில் ஆகியோர் அடங்குவர். கிங் சாலமன் அதிரடி காட்சிகளைக் கையாள உள்ளார்.