குறிப்பிட்ட சில நட்சத்திர நடிகர்கள், தயாரிப்பாளர்களின் குடும்பத்தினர் தெலுங்கு திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் மோகன்பாபு. இவரது மகள் லட்சுமி மஞ்சு, மூத்த மகன் விஷ்ணு மற்றும் இளைய மகன் மனோஜ் மூவருமே அவ்வப்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர்; நால்வருமே தயாரிப்பாளர்களாகவும் இருந்து வருகின்றனர்.
‘கண்ணப்பா’ படத்தில் நாயகனாக நடித்ததோடு தயாரிக்கவும் செய்திருந்தார் விஷ்ணு மஞ்சு.
தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ‘மிராய்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் மனோஜ் மஞ்சு. மோகன்பாபுவுக்கும் இவருக்குமான மோதல் சில மாதங்களுக்கு முன்னர் ‘வைரல்’ செய்திகளாக உலா வந்தது நாமறிந்த விஷயம்.
லட்சுமி மஞ்சு பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் ’தக்ஷா’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. மோகன்பாபு உடன் இணைந்து அவரே இதனைத் தயாரித்திருக்கிறார். சமுத்திரக்கனி, மலையாள நடிகர் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார்.
‘தக்ஷா’ படம் குறித்து கிரேட் ஆந்திரா யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார் லட்சுமி மஞ்சு.
அதில், தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னாள் சூப்பர்ஸ்டாரின் மனைவி நடிப்பு வாய்ப்புகள் கிடைக்காமல் புறக்கணிப்புக்கு ஆளாகி வருவதாகக் கூறினார். “விவாகரத்துக்குப் பிறகுதான் அவருக்கு இந்த நிலைமை நேர்ந்தது. தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு தரவே பயப்படுகின்றனர். அந்த ஹீரோயின் பெயரைக் குறிப்பிட நான் விரும்பவில்லை.
இதே நிலைமையில் ஒரு ஹீரோ இருந்தால், இப்படித்தான் நடக்குமா? நிச்சயம் எந்த மாற்றமும் இருக்காது. அதனால, பெண்களுக்கு யாரும் சுதந்திரம் கொடுக்க மாட்டாங்க. அதை அவங்கதான் எடுத்துக்கணும்” என்று அந்த பேட்டியில் தெரிவித்தார் லட்சுமி மஞ்சு.
‘சமந்தாவைத்தான் நீங்க சொல்றீங்களா’ என்று கேட்டபோது, அதற்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
’எனக்கு தெரிந்து நான்கைந்து நட்சத்திரங்கள் இப்படி விவாகரத்து செஞ்சிருக்காங்க. அவங்க எல்லோரோடவும் நான் க்ளோஸா இருக்கிறேன்’ என்று பதிலளித்திருக்கிறார்.
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே..!
