நீங்கள் 90-களின் தலைமுறையைச் சேர்ந்தவர் என்றால் புகழ்பெற்ற பீட்சா உணவகமான ‘பீட்சா ஹட்’ (Pizza Hut) குறித்த நினைவுகள் உங்களுக்கு நிச்சயம் இருக்கும். டான் மற்றும் ஃபிராங்க் கார்னி ஆகிய சகோதரர்களால் 1958ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பீட்சா ஹட் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. இந்தியாவில் பீட்சா ஹட் நிறுவனமும் அதன் சுவையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆன்லைனில் ஆர்டர் செய்யும் முறை வருவதற்கு முன்பு மக்கள் பீட்சா சாப்பிடுவதற்காக அருகிலுள்ள பீட்சா உணவகங்களுக்குச் செல்வது வழக்கம்.
பீட்சா ஹட் நிறுவனத்திற்கு புதிய உரிமையாளர்:
இந்நிலையில் தற்போது பீட்சா ஹட் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. பீட்சா ஹட் நிறுவனத்தின் உரிமையாளர் மாற்றம் குறித்த முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. இதன் தாய் நிறுவனமான ‘யம் பிராண்ட்ஸ்’ (Yum Brands) பீட்சா ஹட்டின் உலகளாவிய வணிகத்தை 2.7 பில்லியன் டாலருக்கு விற்க முடிவெடுத்துள்ளது. அதிகரித்து வரும் போட்டி, மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் சரிந்து வரும் விற்பனை ஆகியவற்றின் காரணமாக நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவடைவதன் மூலம் பீட்சா ஹட்டின் கடந்தகால பயணம் முடிவுக்கு வந்து, ஒரு புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளது.
இரண்டு பகுதிகளாகப் பிரிகிறது:
இந்த மிகப்பெரிய ஒப்பந்தம் பீட்சா ஹட்டின் ஒட்டுமொத்த உலகளாவிய வணிகத்தையும் இரண்டு தனித்தனி பகுதிகளாகப் பிரிக்கும். ‘யம் சைனா ஹோல்டிங்ஸ்’ (Yum China Holdings) நிறுவனம் பீட்சா ஹட்டின் சீனச் செயல்பாடுகளை 1.2 பில்லியன் டாலருக்குக் கையகப்படுத்தும். அதேவேளையில், தனியார் முதலீட்டு நிறுவனமான ‘லாங்ரேஞ்ச் கேபிடல்’ (Long Range Capital), சீனாவிற்கு வெளியே உள்ள அதன் உலகளாவிய வணிகம் முழுவதையும் 1.5 பில்லியன் டாலருக்குக் கையகப்படுத்தும்.
‘யம் பிராண்ட்ஸ்’ ஏன் இதை வாங்குகிறது?
பீட்சா ஹட் நிறுவனம் கடந்த சில காலமாக விற்பனை சரிவு மற்றும் நிதிச் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகளாவிய பணவீக்கம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு ஆகியவை இந்த பீட்சா நிறுவனத்தின் லாபத்தை வெகுவாகப் பாதித்துள்ளன. மேலும், GLP-1 போன்ற உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்துள்ளதும் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றியுள்ளது. இதனால் மக்கள் துரித உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
