வேட்டி, சட்டை, இடதுதோளில் ‘பேட்ஜ்’ குத்தியது போன்று தொங்கவிடப்பட்ட துண்டு, படிய வாரிய தலை, நெற்றியில் திருநீறு, அதன் நடுவே ஒரு பொட்டு, வாயில் லேசாக ஒழுகும் வெற்றிலைச்சாறு, கொஞ்சம் முரட்டுத்தனமான பாத்திரம் என்றால் கிடா மீசை, கையில் வீச்சரிவாள் இத்யாதி என்று திரையில் ‘தமிழர்’களை அடையாளப்படுத்துகிற வழக்கம் பாலிவுட்டில் இருந்து வருகிறது. ’லுங்கி டான்ஸ், தலைவா’ என்று சில வார்த்தைகளைச் சிதறவிட்டு, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ஸில் தமிழ்நாட்டு மைந்தர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தனர். நம்மூரில் அப்படத்தைப் பார்த்தவர்கள் ‘ஏண்டா நாங்க இப்படியா இருக்குறோம்’ என்று கொதித்துப் போனது தெரிந்த கதை.
திரைப்படங்களில் கூடச் சில நடிகர் நடிகைகளின் தோற்றம் அந்தக் குறையைக் கொஞ்சமாவது மறக்கடிக்கும். தொலைக்காட்சி விளம்பரங்களில் இன்னும் மோசம். டேவிட் வார்னருக்கும் ஏபி டிவில்லியர்ஸுக்கும் வேட்டி கட்டிவிட்டாற்போலச் சிலர் திரையில் தோன்றியிருப்பார்கள். அவர்கள் வசனம் உச்சரிக்கிற தொனியே ‘எங்கடா நேட்டிவிட்டி’ என்று கேட்கும்விதமாக இருக்கும்.

பாலிவுட் என்றில்லை, சில பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற மலையாளத் திரையுலகம் கூடச் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படித்தான் தமிழ் பாத்திரங்களைக் காட்டி வந்திருக்கிறது.
‘சின்ன கவுண்டர்’ படத்தில் வரும் விஜயகாந்தின் தோற்றம் போன்று ஒரு சில திரைப்படங்களையும் அதில் வரும் நடிகர் நடிகையரையும் ‘முன்மாதிரி’யாகக் கொண்டே இது போன்ற சித்தரிப்புகள் நிகழ்த்தப்படுவதைக் கொஞ்சம் ஆராய்ந்தால் புரிந்துகொள்ள முடியும்.
’உயிரே’ படத்தில் ஷாரூக்கானுடன் ஆடிய ப்ரீத்தி ஜிந்தாவின் ஆடையலங்காரம் பார்த்து ‘இது கேரளம் அல்லா’ என்று சொன்னவர்கள் நிறைய. அது போன்ற புலம்பலை மீண்டுமொரு முறை எழச் செய்திருக்கிறது ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கிற ‘பரம் சுந்தரி’ திரைப்படம்.
வட இந்தியாவைச் சேர்ந்த நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா, கேரளாவைச் சேர்ந்த ஜான்வியைத் திடீரென்று சந்தித்து, காதல் வயப்பட்டு, அப்பெண்ணின் திருமண நாளன்று அவரை மணம் முடித்து, இருவரும் ஓட்டம் பிடிப்பதாக ‘பரம் சுந்தரி’ கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

இதில் ஜான்வி கபூரின் மலையாள உச்சரிப்பு, காட்சியாக்கத்தில் காட்டப்பட்ட மலையாள வாசனையைக் கண்டு வளர்ந்து வரும் நடிகையும் பாடகியுமான பவித்ரா மேனன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“கேரளாவில் இருக்கிற பெண்கள் எந்நேரமும் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு மோகினியாட்டம் ஆடிக் கொண்டிருக்க மாட்டார்கள்” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ‘வீடியோ’ வைரல் ஆனது.
அதில், “கேரளாவில் யாரும் இப்படிப் பேசமாட்டார்கள். இந்த பாத்திரத்திற்கு ஒரு மலையாளப் பெண்ணை கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமானதா? உங்களுக்கு ஒரு மலையாள நடிகையை நடிக்க வைப்பதில் என்ன பிரச்சனை? ஏன் இப்படித் தொடர்ந்து மலையாள கதாபாத்திரங்களைத் தவறாகத் திரையில் காட்டி வருகிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார் பவித்ரா.
மலையாளத்தில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் இந்தியிலும் சரளமாகப் பேசித் தனது கேள்விகளைத் தெளிவுற வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதற்கு சமூகவலைதளங்களில் மலையாள ரசிகர்களும் கடுமையாக எதிர்ப்பினைக் காட்டி வருகின்றனர்.
உண்மையைச் சொன்னால், வேறொரு பிரதேசத்தையோ அல்லது அங்கிருப்பவர்களையோ உரிய ‘ஆய்வு மற்றும் தரவு சரிபார்ப்பு’ இல்லாமல் திரையில் சித்தரிக்கிறபோது இந்த தவறு நேர்கிறது. பல நேரங்களில் ‘கமர்ஷியல் படம்னா இப்படித்தான் காட்ட முடியும்’ என்று அந்த தவறை ‘பேண்டஸி’யாக மாற்ற முனைவதுதான், அதற்கான எதிர்ப்பைப் பன்மடங்காக்குகிறது.
’பரம்சுந்தரி’யில் ஜான்வியை திரையில் பார்த்தபின்னும் ரசிகர்கள் இதே ‘சூட்டோடு’ இருந்தால் சரி..!