முத்து பட ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை நடிகை மீனா பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது திரை பயணத்தில் பொன் விழா ஆண்டை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் ரஜினியுடனான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் ரஜினியுடன் முத்து, எஜமான், வீரா உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்த நடிகை மீனா புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார்.

முத்து படம் ஷீட்டிங் சமயத்தில் நடந்த அனுபவத்தை பற்றி அவர் கூறுகையில், “ரஜினி கடகடவென நடந்து போய்விடுவார். கூட்டத்தில் எல்லாம் அவர் தப்பித்துவிடுவார். நாங்கள் மாட்டிக்கொள்வோம். அவரது மனைவியே அவருடன் நடந்து வரும்போது தடுமாறியிருக்கிறார். அவங்களோடு வரும்போதாவது நிதானமாக வாங்க என்று நானே ரஜினியிடம் சொல்லியிருக்கேன்.
முத்து ஷூட்டிங் கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அங்கு நிறைய கூட்டம். அப்போது இதுபோன்று பவுன்சர்ஸ் பாதுகாப்பு எல்லாம் கிடையாது. எங்கள் பட யூனிட் தான் பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள்.
அன்று படம் சூட்டிங் பிரேக் சொன்னதும் ரஜினி வேகவேகமாக சென்றுவிட்டார். கீழே உட்கார்ந்திருந்த நான் எழுவதற்குள் மக்கள் என்னை சூழ்ந்துவிட்டார்கள். பின்னர் அவர்களிடமிருந்து என்னை உதவியாளர்களும், லைட் மேன்களும் தான் காப்பாற்றி அழைத்துசென்றார்கள்.
எனக்கு ஒரு பக்கம் கோவம், ஒரு பக்கம் அழுகை. ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் சோகமாக இருந்ததை பார்த்து இயக்குநர் ரவிக்குமார் என்னம்மா ஆச்சு என்று கேட்டார். அவர் கேட்டதும் பயங்கரமாக அழுது மனதில் இருந்ததை கொட்டி தீர்த்துவிட்டேன்.
அவர் என்னை சமாதனப்படுத்திவிட்டு சென்றுவிட்டார். நான் சாப்பிட்டுவிட்டு, நகையெல்லாம் போட்டுக்கொண்டு மீண்டும் சூட்டிங் சென்றபோது, ரஜினி சாரும் ரவிக்குமார் சாரும் எனக்காக காத்திருந்தனர்.

நான் வெளியே வந்ததும், வாங்க வாங்க என்று அழைத்துக்கொண்டு, எனக்கு முன்னால் ரவிக்குமார் சாரும், பின்னால் ரஜினி சாரும் சென்றனர். அப்போது ராணி கெட்டப்பில் இருந்த நான், உண்மையாகவே ராணி போல உணர்ந்தேன். அதை என்னால் மறக்கவே முடியாது” என்று கூறியுள்ளார்.
