ஒவ்வொரு காலகட்டத்திலும் திரையுலகில் சிலரது காதல் பரபரப்பை ஏற்படுத்தும். அனைவராலும் சிலாகிக்கப்படும். ‘இது போல ஒரு ஜோடி உண்டா’ என்று ஊரே ‘உச்’ கொட்டும். சமீபகாலமாக அப்படியொரு ஜோடியாகப் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி.
‘கீத கோவிந்தம்’ படத்தில் நடித்தபோது தொடங்கிய அவர்களது பிணைப்பு, அதில் வருவது போன்றே பிறர் பொறாமைப்படக்கூடிய ‘கெமிஸ்ட்ரி’யாக மாறியிருக்கிறது. இப்போதுவரை பேட்டிகளிலும் மேடைகளிலும் ’அரசல்புரசலாக’ அது பற்றி இருவருமே பேசினாலும், நேரடியாக அந்த கேள்விகளுக்குப் பதில் சொன்னதே இல்லை.
இந்த நிலையில், ‘கீத கோவிந்தம்’ திரைப்படம் பற்றிச் சமீபத்தில் நினைவுகூர்ந்திருக்கிறார் ராஷ்மிகா. பரசுராம் இயக்கிய அந்த படமே இருவருக்கும் தெலுங்கு திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.

அந்த படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், அது பற்றித் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
”அந்தப் படம் வெளியாகி 7 வருஷம் ஆச்சுங்கறதை என்னால நம்பவே முடியலை. அது எப்பவும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஒரு படம் தான். அதுல நடிச்ச ஒவ்வொருவரையும் நான் நினைச்சு பார்த்திருக்கேன். அவங்களை சந்திச்சு ரொம்ப நாளாச்சு. அவங்க எல்லோருமே நல்லா, சிறப்பா இருப்பாங்கன்னு நம்புறேன்” என்று கூறியிருக்கிறார் ராஷ்மிகா.
வழக்கமான காதல், நகைச்சுவை, குடும்ப சண்டை சச்சரவுகள், நெகிழ்ச்சியான கருத்து பகிர்வுகள் என்றிருக்கிற ‘கீத கோவிந்தம்’ உள்ளடக்கம் ரசிகர்களைப் பெருமளவில் ஈர்த்து, நல்லதொரு ‘பேமிலி படம்’ என்ற பெயரைப் பெற்றது.
அந்த படத்தில் கிடைத்த வரவேற்புக்கு மாறாக, கவர்ச்சிக்குத் தாவினார் ராஷ்மிகா. அனிமல், சீதாராமம், வாரிசு, ச்சாவா, குபேரா என்று வித்தியாசமான கதைகளில் நடித்து, இன்று ’நேஷனல் க்ரஷ்’ என்று புகழும்படியான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்.
தற்போது ‘தி கேர்ள்பிரண்ட்’ எனும் தெலுங்கு படத்திலும் ‘தமா’ எனும் இந்திப்படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இவையிரண்டும் விரைவில் திரையில் வரவிருக்கின்றன.
இப்போது ராஷ்மிகாவுக்கு 29 வயதாகிறது. அதனால், அவர் திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் சில செய்திகள் வெளியாயின. அது உண்மையா என்பதை அறியும் வகையில், இந்த ஆண்டு இறுதியிலாவது ‘காதல்’ சேஃப்டரை அவர் ‘ஓபன்’ செய்கிறாரா என்று பார்ப்போம்..!
