Spoiled panchamirtha bottles destroyed
பழனியில் சுமார் 70,000 டின்களில் இருந்த கெட்டுப்போன பஞ்சாமிர்தத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 16) குழி தோண்டி புதைத்து அழித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும்.
பழனிக்கு வரும் பக்தர்கள் யாரும் இங்கு பிரசாதமாக வழங்கப்படும் பிரசாதத்தை வாங்காமல் செல்லமாட்டார்கள்.
சிறிது கூட தண்ணீர் சேர்க்காமல் வாழைப்பழம், வெல்லம், பசு நெய், தேன், ஏலக்காய், கற்கண்டு, பேரிச்சை ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் பழனி பஞ்சாமிர்தம் உண்டால் எவ்வித நோயும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கெட்டுப் போகாமல் இருக்க செயற்கையாக எந்த வேதிப்பொருட்களும் கலக்கப்படாமல், இந்திய அரசின் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படும் இந்த பழனி பஞ்சாமிர்தம் புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட லட்டு, முறுக்கு, அதிரசம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் கெட்டுப்போய் இருந்ததாக பக்தர்கள் கடை விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பக்தர்களிடம் இருந்து புகார்கள் எழுந்த நிலையில், பஞ்சாமிர்தம் தயாரிப்பு கூடம் மற்றும் பிரசாத கடைகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து பழனி கோவிலில் கெட்டுப்போன நிலையில் 70,000 பாட்டில்களில் இருந்த பஞ்சாமிர்தம் இன்று அழிக்கப்பட்டது.
கள்ளிமந்தையத்தில் உள்ள கோசாலையில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பஞ்சாமிர்த பாட்டில்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதனால் ரூ.30 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகர் விஜய்யின் கட்சிக்கு ஆதரவா? : பதறிய ஜெயம் ரவியின் பளீர் பதில்!
தலைவர் 171: ரஜினிக்கு வில்லன் இவர்தான்?
Spoiled panchamirtha bottles destroyed