உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது என்னை அழைக்காதது வருத்தமாக இருக்கிறது என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று (மே 15) தெரிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “நாங்கள் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்து தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோம். அந்த கூட்டணியில் தான் இன்று வரை இருக்கின்றோம். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எனக்கு நல்ல நண்பர். அவருடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது என்னை அழைக்காதது வருத்தமாக இருக்கிறது. பிரிந்து கிடக்கின்ற அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. Ops says disappointment with amit shah
தர்மயுத்தத்தை ஆரம்பித்து அதிமுகவுடன் ஒன்றிணையும்போது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். நான் ஒருங்கிணைப்பாளர் ஆனதை எடப்பாடி ஏற்றுக்கொண்டார். அவர் முதல்வரானதை நான் ஏற்றுக்கொண்டேன். ஆகவே, அணிகள் இணைகின்றபோது சில பொதுவான கருத்துக்கள் உருவாகும்.
அணிகள் இணைப்பு தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆறு பேர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்படி எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என்று எடப்பாடி சொல்கிறார். ஆனால், அந்த ஆறு பேரும் இந்த சந்திப்பு தொடர்பாக என்னிடம் பேசினார்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு தற்காலிகமாகத் தான் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது. தற்போது வரை அந்த நிலை தான் நீடிக்கிறது” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். Ops says disappointment with amit shah
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய வைத்திலிங்கம், “அதிமுகவில் எங்களை இணைக்காமல் 2026 தேர்தலில் வெற்றி பெற முடியாது. இது பொதுமக்கள் மற்றும் கட்சிக்காரர்களின் எண்ணம்” என்றார்.