ADVERTISEMENT

கட்டண கொள்ளையை தடுக்க.. அரசு போக்குவரத்து கழக இணையதளத்தில் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு- பண்ருட்டி வேல்முருகன்

Published On:

| By Mathi

TVK Velmurugan

“அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவுகளும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) ஒருங்கிணைந்த ஆன்லைன் தளத்தின் (Unified Online Portal) கீழ் மட்டுமே நடைபெறும் ஒற்றைச் சாளர முறை உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் விடுமுறை நாட்களிலும், முக்கிய பண்டிகைக் காலங்களிலும் சொந்த ஊர் செல்லும் இலட்சக்கணக்கான மக்களின் தவிர்க்க முடியாதப் பயணத் தேவையைப் பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் நிகழ்த்தி வரும், நேரடியான அல்லது மறைமுகமான, அப்பட்டமானப் பகற்கொள்ளை வேதனையளிக்கிறது.

ADVERTISEMENT

சொந்த பந்தங்களை நாடிச் செல்லும் மக்களின் மகிழ்ச்சிப் பயணத்தை, கண்ணீரும் கவலையும் நிறைந்த, பொருளாதாரச் சுமையாக மாற்றுவது உச்சக்கட்டச் சுரண்டலாகும்.

சாதாரண நாட்களில் ₹500 முதல் ₹600 வரை மட்டுமே உள்ள ஒரு இருக்கையின் பயணச்சீட்டு விலை, பண்டிகைக் காலங்களில் எந்தவித நியாயமானக் காரணங்களும் இன்றி, ₹1500, ₹3000, சில சமயம் ₹4000 வரை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவது ஒரு சமூக அநீதியாகும்.

ADVERTISEMENT

தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் மாதச் சேமிப்பின் ஒரு பகுதியை, இத்தகைய கட்டணக் கொள்ளையால் இழக்கிறார்கள். இது, ஒரு குடும்பத்தின் அத்தியாவசியச் செலவினங்களை விட அதிகமாகி, அவர்களைக் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுகிறது.

அரசு நிர்ணயித்த விதிகள் மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தல்களைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் நடக்கும் இந்தச் செயல்கள், தமிழக அரசின் சட்டக் கட்டுப்பாட்டையே கேள்விக்குறியாக்குகின்றன. மக்களின் கஷ்டத்தைப் பயன்படுத்தும் இந்த மனிதாபிமானமற்ற இலாப வேட்டையை, இனியும் அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

ADVERTISEMENT

மக்களின் கண்ணியமானப் பயண உரிமையைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாகக் காலத்தின் தேவைக்கேற்ப, நல்லதொரு வழிகாட்டுதலுக்குரிய சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்றும்,

ஆம்னி பேருந்துகளுக்கு, இயக்கச் செலவுகள் மற்றும் நியாயமான இலாபம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நிரந்தரமான, பொதுமக்களுக்கு உகந்த, பயணச்சீட்டு விலை நிர்ணயக் கொள்கையை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும்,

அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவுகளும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) ஒருங்கிணைந்த ஆன்லைன் தளத்தின் (Unified Online Portal) கீழ் மட்டுமே நடைபெறும் ஒற்றைச் சாளர முறை உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share