பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம் இன்று (அக்டோபர் 12) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பீகார் தேர்தல் 2 கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாட்களில் நடைபெறும். அனைத்து வாக்குகளும் நவம்பர் 14-ந் தேதி எண்ணப்படும்.
பீகார் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் காங்கிரஸ்- ஆர்ஜேடி- இடதுசாரிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி இடையேதான் போட்டி.
இந்த நிலையில் இருஅணிகளும் கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் முனைப்பாக உள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை அறிவித்துள்ளது.
பாஜக கூட்டணியில் பாஜக 101 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஜேடியூ 102 இடங்களிலும் போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் சிராக் பாஸ்வானின் எல்ஜேபி முன்னர் 20 முதல் 22 இடங்களில் போட்டியிட ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால் அதிகபட்சம் 40 தொகுதிகளை கட்டாயம் தர வேண்டும் என பிடிவாதம் பிடித்தது எல்ஜேபி.
இதேபோல பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 15 தொகுதிகளைக் கேட்டது.
இந்த பின்னணியில் இன்று மாலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பீகார் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார்- தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு
- பாஜக 101
- நிதிஷ்குமாரின் ஜேடியூ 101
- சிராக் பாஸ்வானின் எல்ஜேபி 29
- ஜிதன் ராம் மாஞ்சியின் அவாமி மோர்ச்சா 6
- உபேந்திர குஷாவாஹாவின் ஆர்எல்எம் 6
