பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தலிபான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் பல காவல் அரண்களை தலிபான் படையினர் கைப்பற்றி உள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் 2021-ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களுக்கு அங்கீகாரம் தந்த முதல் நாடு பாகிஸ்தான்.
அதே நேரத்தில் அண்மை காலமாக பாகிஸ்தான்- ஆப்கான் இடையே உறவு மிக மோசமாக சீர்குலைந்துள்ளது. தங்கள் நாட்டுக்குள் தலிபான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. இதனால் ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான், தீவிரவாத முகாம்களை அழித்ததாக கூறி வந்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் எல்லை பகுதிகள் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ராணுவமும் தாக்குதல் நடத்தியது.
இந்த இருதரப்பு மோதலின் உச்சமாக அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு தற்போது ஆப்கானிஸ்தான் பதிலடி தந்துள்ளது.
பாகிஸ்தானின் எல்லை பகுதிகளில் ஆப்கானிஸ்தானின் தலிபான் ராணுவம் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பாகிஸ்தானின் எல்லை காவல் அரண்களையும் ஆப்கானிஸ்தானின் தலிபான் ராணுவம் கைப்பற்றி இருக்கிறது.
ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையேயான இந்த மோதல் குறித்து கத்தார் நாடு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
