சாதி பெயர்களை நீக்குவதில் அரசியல் வேண்டாம் என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளின்படி ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. சாதி சார்ந்த பெயர்கள் நீக்கப்பட்டு, அண்ணா, கலைஞர், காமராசர் உள்ளிட்ட பெயர்களைச் சூட்டலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கோவையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்துக்கு ஜிடி நாயுடு பாலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து பேசினர்.
நாமக்கல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி , நீங்கள் எந்த தலைவர் பெயரையும் வைக்க வேண்டாம். ஒரு தலைவர் பெயரை வைத்து இன்னொரு தலைவர் பெயரை வைக்கவில்லை என்றால் பிரச்சனை வரும். அதிமுக ஆட்சி வந்ததும் இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்று பேசியிருந்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (அக்டோபர் 11) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘எடப்பாடி பழனிசாமிக்கு அவருடைய மாலை நேர பிரசங்கங்களில் ஏதேனும் ஒரு சப்ஜெக்ட் கிடைக்க வேண்டும். ஏதாவது ஒன்றைச் சொல்லி தமிழ்நாடு அரசின் மீது அவதூறு பரப்ப வேண்டும். அதன் மீது அவர் தன்னுடைய கருத்துக்களை திரித்து, திரிபுவாதத்தை மேற்கொண்டு, நல்ல திட்டங்களுக்கும் வேறுவிதமான திரிபு நோக்கங்களைக் கொண்டு வரவேண்டும் என்கின்ற அவருடைய தணியாத ஆசையின் அடிப்படையில், அவர் உண்மைகளை திரித்து நாட்டு மக்களிடையே தவறான கருத்துக்களைப் பரப்பி கொண்டிருக்கிறார்.
இன்னும் ஒரு படி மேலே போய் சொல்கிறார் ஏன் இவர்கள் பெயரை எல்லாம் வைக்க கூடாது என்று சில அரசியல் கட்சித் தலைவர்களுடைய பெயரும் கேட்கிறார். அரசாணை வெளியிடுகிறபோது, குறிப்பிட்ட பெயர்கள் என்று இந்த பெயர்கள் தான் வைக்க வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடவில்லை.
அண்மையில், கோவையில் முதலமைச்சர் திறந்து வைத்திருக்கக்கூடிய தமிழ்நாட்டில் மிக நீளமான 10 கிலோ மீட்டருக்கு மேலே இருக்கக்கூடிய ஒரு உயர்மட்ட பாலத்திற்கு, புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயரை வைத்திருப்பதையும் அவர் குறையாக சொல்கிறார்.
ஜி.டி. நாயுடு யார்? ஒரு மிகப் பெரிய விஞ்ஞானி. அந்த பகுதியிலேயே அவர் குடியிருந்தவர். எனவே, அந்தச் சாலைக்கு அவருடைய பெயரை கோவை மாவட்டத்தின் மக்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களுக்கும் ஒரு மாபெரும் அடையாளமாக, ஒரு விஞ்ஞானியாக விளங்கிய அவர், அவருடைய பெயர் சூட்டுவது என்பது சாலப்பொருத்தமாக இருக்கும் என்ற வகையில் தான் அவருடைய பெயரை நம்முடைய முதலமைச்சர் சூட்டினார்.
ஆனால், ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடு என்று இருக்கிறது என்று சொன்னால், அவருக்கு வெறும் ஜிடி பாலம் என்றா அழைக்கமுடியும்? அந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று வைக்கும்பொழுதுதான் அவர் இன்னார் என்று அறியப்படுகிறார்.
“எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்கின்ற நிலையில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவரும், அந்த நிலையை பின்பற்றிருக்கக்கூடிய வேறு சில அரசியல் கட்சித் தலைவர்களும் இதனுடைய உண்மை நிலையை உணர்ந்து தமிழ்நாடு அரசு எந்த நோக்கத்திற்காக இந்த அரசாணை வெளியிட்டு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் எவ்வாறு அறியப்பாட்டார்களோ, அப்படியே பெயர் வைத்தால்தான் அவர்களைக் குறித்து வரக்கூடிய சந்ததிகள் அறிந்துகொள்வார்கள். இவற்றை விதிவிலக்காகக் கருத வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், ‘இந்த ஒட்டுமொத்தமான சாதிப் பெயர்களை நீக்கக்கூடிய முதலமைச்சரின் திட்டம் என்பது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள். அதில் இருக்கக்கூடிய எத்தகைய மாறுபாடுகளாக இருந்தாலும் அது செல்வம் குறித்த மாறுபாடுகளாக இருந்தாலும், சமுதாயத்தின் படிநிலைகளில் இருக்கக்கூடிய, அடுக்குகளில் இருக்கக்கூடிய இத்தகைய சாதி நிலைகளின் காரணமாக அவர்கள் இழித்துரைக்கப்பட்டு, அதனுடைய அவர்களுக்கு படிநிலைகளில் இழைக்கக்கூடிய அநீதிகளாக இருந்தாலும், அவற்றையெல்லாம் முற்றிலுமாக நீக்கக்கூடிய ஒரு சமத்துவ, சமதர்ம, சமுதாயத்தை நோக்கிய ஒரு சமூக நீதியின் அடிப்படை பயணமாக இது அமைந்திருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
